எளிய மனிதர்களின் விலாசம் - இரத்தின மூர்த்தியின் விசாலம்
தளத்துள் வழக்கம் போல மேய்ந்து கொண்டிருந்த ஒரு நாளில் 'இன்னும் சற்று நேரம் தான்' என்றொரு கவிதை படிக்கக் கிடைத்தது. வேலை நிறுத்த நாளொன்றின் சாலையை அப்படியே படம் பிடித்துக் காட்சிப் படுத்தி இருந்த அந்தக் கவிதையை வாசித்த இனிய கணப் பொழுது மனம் துள்ளி விழுந்தது.
அந்தக் கவிதை மூலமாகவே நண்பர் இரத்தின மூர்த்தி அறிமுகமானார். அவரின் அத்தனைக் கவிதைகளையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது; அது ஒரு நாளில் நிகழ்ந்தது; மனம் மிக மகிழ்ந்தது; அன்றிலிருந்து தளத்தில் நண்பரின் கவிதைகளை நான் வாசிக்கத் தவறுவதில்லை;
அவ்வாறே 'விசாலம்' தொகுப்பிலிருந்து ஒரு கவிதையோடு நண்பர் தொகுப்பு வெளியிட்டு இருக்கும் செய்தியை அறிந்து படிக்க ஆவல் கொண்டு கேட்டுக் கொண்டதற்கிணங்க புத்தகத்தை நண்பர் அஞ்சல் மூலம் என் கைகளில் தவழ விட்டார். மகிழ்ச்சிக்குரிய தருணம் அது.
அன்றிலிருந்து என் பயண நேரத்திலும் சயன நேரத்திலும் பக்கத் துணையாய் விசாலம் இருந்தது. முதலில் படிப்பதற்குச் சற்றுத் திணறத் தான் வேண்டி இருந்தது. செய்யுள் பாக்களை வாசிப்பதைப் போல நிறுத்தி நிதானமாகப் படித்ததன் விளைவு எனப் பின் புரிந்தது.
பேச்சு வழக்கில் அமைத்த கவிதைகளைப் பேச்சு வழக்கில் தானே படிக்க வேண்டும் எனப் புரிந்த கணத்தில் வாசிக்கத் துவங்கிய வேளை பல எளிய மனிதர்கள் என் கைப் பிடித்து அவர்களின் இனிய மொழிக்கு என்னைப் பழக்கி விட்டார்கள்.
முதல் கவிதை விசாலம் அதிலே;
'வீடு என்னவோ வீட்டுக்காரனுக்கு
சொந்தமாக இருந்தாலும்
திண்ணை ஊருக்கே சொந்தமாகும்
அப்பபோ வந்து பட்டாப் போட்டுட்டு
சொந்தம் கொண்டாடிட்டு போய்டுவாங்க'
என்ற வரிகளுக்கு முழுப் புத்தகத்தையும் படித்த பின் தான் வேறு ஒரு அர்த்தமும் பிடிபட்டது எனக்கு. புத்தகம் என்னவோ இரத்தின மூர்த்திக்குச் சொந்தம் என்றாலும் புத்தகத்தின் கவிதை பக்கங்கள் ஒவ்வொன்றும் எளிய மனிதர்களுக்கு பட்டாப் போட்டுக் கொடுத்தார் போன்று ரத்தினமூர்த்தியை எங்கும் காணமுடியவில்லை. அது தான் இந்த பதிப்பின் வெற்றி.
தொடர்ந்து வரும் மூச்சு காத்து, சாதிப்பால்,முகவரி, தன்மானம் என வரும் கவிதைகளிலும் இயல்பான அந்த மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு.
ஆசைப்பட்ட சொத்து எனும் கவிதையில் வரும்
'வேம்பு வீட்டுக்கு முன்னாடி ஆகாதுன்னு
தெரிஞ்சும் வெட்டாம வெச்சிருக்கான்
பொலம்பிட்டு இருந்தா அதே மரத்து
நெழல உட்காந்துட்டு'
போன்ற எள்ளல் வரிகளாகட்டும்
'பிழைக்க இடம் கொடுத்தார்கள் என்பதற்காக
மகா ராணியை கப்பமாகக் கொடுத்து ஆட்சி செய்ய வேண்டியதில்லை மானமும் ரோஷமும் நம்முடன் குடி கொண்ட வறுமையை விட அதிகமாகவே உள்ளது மந்திரியே நாளை பொழுது விடிவதற்குள் வேறு தேசம் போக புறப்பட தயாராகுங்கள் இது என் உத்தரவு அப்படின்னு சொல்லிட்டு மகாராசா
அழுதுட்டு ஓடுனத நாடகம்னு நெனச்ச
எல்லாரும் உழுந்து உழுந்து சிரிச்சாங்க
என்ற வரிகள் தாங்கி வரும் அவலச் சுவை ஆகட்டும்
'வழுக்குப் பாறைல வெளுக்குறப்ப
வழுக்கி விழுந்தாப்ள ஆச்சுது'
என்ற அழகிய வார்த்தை ஜாலமாகட்டும்
பொல்லாத சாமி யில் வரும்
'எங்கயோ ஒரு பக்கம்
உழைக்கிற ஒரு தொழிலாளியோட
முயற்சிக்கு உதவிட்டு
ரொம்ப நாளா தன்ன நெனச்சிட்டிருந்த
பக்தன் பக்கிரிய பாக்க இப்பதான்
கோயிலுக்கு புறப்படராறு
கடவுளார்'
வரிகளும்
'கர்ணனுக்கு கவச குண்டலம் போல
அவனுக்கும் ஒன்னு உண்டு'
என்னும் 'ஒதற முடியாது' கவிதையின் வரிகளும்
இது நிலவின் கதையல்ல என்ற கவிதையில் வரும்
'கருவேளங்காடா மூடிருக்கிற சாதிக்காட்டுல
இவங்க வண்டி கெரட்டுக் கெரட்டுனு
ஒத்தரு கண்ணும் படாம ஓடிட்டிருந்தது'
'அவ நினைப்புல இருக்கிற உசிர
தார்குச்சியால குத்தி கிழிக்கணும்னு துடிச்சான்
போன்ற வரிகளில் காணும் உவமைகளும்
'கள்ளிக் காட்டுல கெணத்து மேட்டுல
வனாந்திரத்தில வாய்க்கா வரப்பில
கொளம் குட்டைல இப்படி'
எங்கும் கவிதை பிடிக்கும் ரத்தினமூர்த்தி யை நேசிக்கவும் அவர் மனதை வாசிப்பதும் காலத்தின் இனிய கட்டளை இந்த விசாலம்.