வேண்டுமுங்க

மும்மாரி மழைபொழிந்து
மூன்றுபோகம் விளைச்சல் கண்டு
மகிழ்வோடு வாழ்ந்திடுதல் வேண்டுமுங்க!
சும்மாவே தானிருந்து
சோம்பேறி என்றாகிப் பிறரைச்
சுரண்டுகின்ற நிலைமாற வேண்டுமுங்க!

மனிதனாக வாழ்ந்திருக்க
மனமாற்றம் தேவையென இன்று
மனமார எண்ணிடுவோர் வேண்டுமுங்க!
மனித இனம் செம்மையுற
மலர்ந்திட்ட மதமெல்லாம் இனியிங்கு
மரணபயம் தொலைத்திடுதல் வேண்டுமுங்க!

எந்தவழி நல்லவழி
என்றறிந்து சொல்லுகின்ற நல்ல
இதயமதைக் கொண்டிடுவார் வேண்டுமுங்க!
மந்தையென ஓடுகின்ற
மதிகெட்ட மானுடத்தை நன்கு
மாண்புபெறச் செய்திடுதல் வேண்டுமுங்க!

நீதிக்கு நெருப்பிட்டு
வீதியிலே கொளுத்துகின்ற வீணர்
வீணென்று ஒதுக்கிடுதல் வேண்டுமுங்க!
சாதிக்கும் மாலையிட்டு
சங்கடங்கள் கொடுத்திடுவார் இனிமேல்
சமத்துவத்தை விதைத்திடுதல் வேண்டுமுங்க!

நச்சுமரம் போலொருவர்
நடுஊரில் வாழ்ந்திடுதல் தீமை
என்றெண்ணி ஒதுக்கிடுதல் வேண்டுமுங்க!
அச்சமதை வேரறுத்து
அஞ்சாமை நெஞ்சுடைத்து நாட்டில்
வஞ்சமதை ஒழித்திடுதல் வேண்டுமுங்க!

நினைப்பதெல்லாம் எந்நாளும்
நன்றாக நடந்திடவே எண்ணும்
நல்லோர்கள் நிறைந்தடுதல் வேண்டுமுங்க!
தினையாகி பனையாகி
மலையாகி வளமெல்லாம் எந்நாளும்
மறையாது நிலைத்திடுதல் வேண்டுமுங்க!
*****************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (17-Mar-14, 8:39 pm)
பார்வை : 83

மேலே