உரிமையுள்ள உறவுகள்
வாழ்க்கையில் நாம் காணும் சில நிகழ்வுகள் நம்மை பல தருணங்களில் ஏங்க வைத்துவிடும். அவ்வாறு என் வாழ்க்கையில் நான் கண்ட சில நிகழ்வுகள் என்னையும் அந்த ஏக்கத்திற்கு உள்ளாக்கியது. 2009 ஆம் ஆண்டு சென்னையில் பிரபல தொழிற்சாலை ஒன்றில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு மனிதனும் தன்னுடன் பழகும் நண்பர்களில் ஒரு சிலரை மட்டும் அதிகமாக நேசிக்க ஆழ்படுவானல்லவா, அதைப் போன்றுதான் நானும் அகத்தியன் (பெயர் மாற்றம்) என்கின்ற தோழன் பெற்றிருந்த குணத்தை அறிந்து அவனுடன் நல்ல தோழமையை ஏற்ப்படுத்திக் கொண்டேன். ஒவ்வொருவரும் தன்னுடன் பழகும் தோழர்களை வீட்டிற்கு அழைப்பது இயல்பு, அதைபோல் என் தோழனும் அவன் வீட்டிற்கு என்னை அழைத்தான். எனக்கு அப்பொழுது விடுமுறை அமையாத காரணத்தால் அவன் அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை எனினும் விடுமுறை கிடைக்கும் பொழுது வருவதாக அவனிடம் கூறிச்சென்றேன்.
பல நாட்கள் அவன் தோழமையால் மிக அழகாய் கழிந்தன. ஒரு நாள் என் தோழனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பு அவனை சோக கடலில் ஆழ்த்தியது. காரணம், தன் தாயாரின் மரணம். ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் அலைமோதி உறைந்து நின்றான். நானும், என் தோழர்களும் அவனது சொந்த ஊரான திருச்சிக்கு அவனை அனுப்பிவைத்தோம். சில நாட்களுக்கு பிறகு எனக்கும் விடுமுறை கிடைத்தது. என் தோழன் ரஹீமுடன் திருச்சிக்கு அவனை காணச் சென்றேன். அங்குதான் நான் கண்ட நிகழ்வு என்னை வியப்பிற்கும், ஏக்கத்திற்கும் உள்ளாகியது. ஒரு தாய் தன் மகனுக்கு எவ்வகையான பணிவிடைகளை செய்வாரோ அவை அனைத்தையும் அவனுக்காக என் தோழனின் அத்தை மகள் செய்து கொண்டிருந்தாள். எத்தனை பேருக்கு அமையும் இந்த பாக்கியம்!!! அவள் செய்த பணிவிடைகளுக்கு காரணம் காதலா??? இல்லை கருணையா??? என்று தெரியவில்லை. ஆனால் அது எதுவாக இருந்தானும் அந்த பாசம் மட்டும் உண்மையாக தெரிந்தது. அவன் மனதை புரிந்துகொண்ட அந்த உறவின் உண்மையான அன்பிற்கு முன் இவ்வுலகிலுள்ள ஆயிரமாயிரம் அற்புதங்கள் கூட அர்தமற்றவையென்று தோன்றியது. இத்தகைய உறவுகள் அனைவருக்கும் அமைவதில்லை. இதுவும் ஒரு வகையில் இறை அளித்த வரம்தான்.
சின்ன சின்ன சண்டை, கோபம், பாசம், கேலி, ஆசை, காதல், இன்பம், துன்பம் இதில் எதுவாக இருந்தாலும் உண்மையாகவும், உரிமையாகவும் அவர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்; இதை உணர்ந்தவர் அறிவர் அந்த உறவின் உன்னதத்தன்மையை.
என் தோழனை போன்று எனது வாழ்க்கையிலும் அத்தை உறவுகள் கிடைக்கப்பெற்றும் ஒரு சில சூழ்நிலைகளால் அவர்களுடன் பழகும் அந்த வசந்தகால தருணங்களை நழுவவிட்டுவிட்டேன் என்பதை அறிந்தவன் இங்கு நான் மட்டும்தான். ஏன் என்பதற்கு காரணம் இந்த சமூகத்தை மட்டுமே குறைக் கூற தோன்றுகிறது. எவனொருவன் இந்த சமூகத்திற்கு முன் தன் தரத்தை உயர்த்தி காட்டுகிறானோ அவனுக்கு மட்டுமே இந்த சமூதாயதோடு சேர்ந்து வாழ அங்கிகாரம் கிடைக்கின்றது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டாலும், இல்லையென்றாலும் உண்மை நிலை இதுவே. அத்தகைய தரத்தை தேடி அலைந்து திரிந்ததில்தான் அந்த இனிமையான தருணங்களை நழுவவிட்டுவிட்டேன். இந்த நவீன சமூதாயதோடு சேர்ந்து வாழத் தேவையான தகுதிகள் அனைத்தும் இப்பொழுது என்னிடம் இருந்தாலும் கூட இதை வைத்து நழுவவிட்ட அந்த வசந்த காலத்தையும், துள்ளி திரிந்த இளமைப் பருவத்தையும் என்றென்றும் திரும்பிப்பெற இயலாதென்பதை அனைவரும் அறிவார்கள். ஒன்றைப் பெற வேண்டுமென்றால், ஒன்றை இழக்க வேண்டுமென்று கூறுவார்களே அதை இப்பொழுது நான் உணர்கின்றேன்.
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய சில மகிழ்ச்சியான தருணங்கள் உள்ளது அதை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுத்துவிட வேண்டாம். ஏனென்றால் இந்த வாழ்க்கை ஒருமுறைதான்; காலம் கடந்து திரும்பி பார்த்தால் அந்த உறவுகளும் அர்த்தமற்றுருக்கும், உங்கள் இளமை கால நினைவுகளும் அர்த்தமற்றுருக்கும். படிப்பு, பணம், பதவி இவை அனைத்தும் ஒவ்வொருவருக்கும் தேவைதான் அதேசமையம் அத்தை உறவுகள், மாமன் உறவுகளால் நிகழும் சிறு சிறு குறும்புகளையும், சண்டைகளையும், சமாதானம் என்கின்ற பெயரில் அழவைக்கும் கேலிக்கைகளையும் தொலைத்துவிட வேண்டாம். அந்த உரிமைகொண்ட உறவெல்லாம் அவரவர் திருமணம் வரை மட்டும்தான், அதற்கு பிறகு எவராலும் சுதந்திரமாக உரிமையுடன் பேசவோ, பழகவோ இயலாது. இத்தகைய உறவுகள் கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு மனிதனும் "தாமரை இலையின் மேல் உறவாடும் நீர் போல்" அந்த சுகத்தை அனுபவித்து பாருங்கள், உரிமைகொண்ட அந்த உறவின் அர்த்தம் என்னவென்று விளங்கும். அப்படி நீங்கள் அனுபவித்த ஒவ்வொரு தருணங்களையும் நினைத்துப் பார்க்கையில் இளமை குறையாத வெட்கத்தோடு கூடிய ஒரு அழகிய புன்னகையை உங்கள் காலம் முழுவதும் உருவாகுமென்பதில் எவ்வித ஐய்யமுமில்லை.
இவண்,
-கார்த்திக் நித்தியானந்தம்...