சவாரி செல்லும் சபலங்கள் -2

ஒன்றுமே நடக்காதது போல் நான் ஞாயிறு விடுமுறை முடிந்து அலுவலகம் வந்து விட்டேன். என் மனைவி வீட்டிலேயே இருந்தாள். என்ன செய்வாளோ என மனம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது.
“என்ன சார் ஒரு மாதிரி டென்ஷனா இருக்கிறீங்க” நண்பர் கேட்ட பொழுது , “ஒன்றுமில்லை, வயறு சரியில்ல” என வயிறு புளி கரைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கூறினேன். சாப்பாடு கொண்டு வரவில்லை என்பதால் காலாற நடந்து செல்லலாம் என நினைக்கையில், செல் போன் அலறியது. எடுத்துப் பார்த்ததில் என் மனைவிதான் எனப் புரிந்தது. “ஹலோ” என ஒரு வார்த்தை மட்டுமே கூறினேன். “

“எக்கேடோ கெட்டுப் போ என ஆபீசுக்கு போய் விடுவீர்களா? உடனே புறப்பட்டு வீட்டுக்கு வாங்க” எனச் சொல்லி வைத்து விட்டாள்.

அவள் பேசியதே பெரிய மருந்து போல் ஆகியது. ஆயினும் புதிய கவலை படர ஆரம்பித்தது. காலையில் வந்ததே மிக தாமதமாகத்தான். மறுபடியும் லீவ் கேட்டால். நமக்கே மனசாட்சி இல்லையா? மனசாட்சியை கொன்று விட்டு மனைவிக்குப் பயந்த கோழையாக லீவு எழுதி கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டினை அடைந்த போது மயான அமைதி குடி கொண்டு இருந்தது.

நான் முகம் கழுவிக் கொண்டு வந்து துவாலையில் துடைத்துக் கொண்டே ஊஞ்சலில் வந்து அமர்ந்தேன். கையில் காப்பியுடன், குளித்துப் பொட்டிட்டு, மங்கள கரமாக வந்தாள் என் மனைவி. சாப்பாட்டு நேரத்தில் காப்பியா? சொல்ல வந்ததை சொல்லாமல் அமுக்கிக் கொண்டேன். மனதில் அவள் மீது துளிர்த்து இருந்த வெறுப்பு தணியவில்லை. எனவே அவளது மேக் அப்பை கவனியாதவன் போல், காப்பியை வாங்கி ருசித்துக் குடிக்கலானேன்.

“யார் இப்படி கூப்பிட்டாலும் போய் விடுவீர்களா” மிக மெதுவான குரலில் விசாரணை ஆரம்பித்தது. “பெரிசா பேசுவீங்களே, கற்பு, மனித மதிப்பீடுகள், விழுமியங்கள் அப்படீன்னு அர்த்தம் தெரியாம ஒளருவீங்களே, அதெல்லாம் ஊருக்குத்தானா? கேள்வி ஒவ்வொன்றும் நிதானமாக எழுந்தது. பேச்சில் கோபம் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். பெரிய பேச்சு பேசப் போகிறாள். அதற்குத்தான் இந்த அஸ்திவாரம். எனப் புரிந்தது

“ எங்க போய்ட்டாங்க” நான் சலிப்புடன் கூறினேன்.

“அப்ப நீங்க போகல, நான் பீச்சுல வந்து கையும் களவுமா புடிச்சது எல்லம் என்னோட கனவு. அப்படித்தானே?”

“சும்மா போய்ட்டேன், போய்ய்ட்டேன்னு கொச்சைப் படுத்தி பேசாதே. ஏற்கெனவே நான் சொல்லிட்டேன். அண்ணன் பையனைப் பத்தி சொல்றேன்னு அவள் சொன்னதுனால நான் போனேன்.”

“:அப்படியா, அதுல திருட்டுத்தனம் இல்லன்னா, நான் போன் பண்ணப்பவே சொல்ல வேண்டியதுதானே? ஏன் சொல்லல?”

“உப்பு சப்பு இல்லாத சமாச்சாரத்தை உங்கிட்ட சொல்லனுமா. ஏற்கெனவே எங்க அண்ணன் பேரைச் சொன்னாவெ உனக்கு பிடிக்காது. அவர் பையனை கரையேத்த நீங்க யாருண்ணு கேப்ப. அப்படி இருக்கும் போது நான் அத எப்படி சொல்லுவேன்”

“எல்லாத்தையும் சொன்னாதான் நீங்க நல்ல உத்தம புருஷன். ஏன் நான் எல்லாத்தயும் சொல்றதில்லையா? அதே மாதிரி நீங்களும் சொல்ல வேண்டாமா”

“ஆபீசுல வேலை செஞ்சுட்டு இருந்தவனை கூப்பிட்டு இப்படி வம்பு பண்ணத்தான் கூப்பிட்டியா?”

“வம்பு பண்றேனா. யார் நானா,? வம்புல மாட்டிக்க இருந்தீங்க, ஒங்களை காப்பாத்தி இருக்கேன்.” சொல்லி முடித்து விட்டு ஒரு பெரு மூச்சு விட்டாள்.

“அந்த்ப் பேய் அப்படி பிஹேவ் பண்ணும்னு யார் நெனைச்சா. எல்லாம் என் நேரம்”
கையாலாகாத பெண் பிள்லை போல அலுத்துக் கொண்டேன்.

“மிஸ்டர் பரோபகாரி, ..ஒங்க அண்ணா பையன் பேரு தெரியுமா? ..அந்த மேலா மினுக்கி பேரு தெரியுமா? இப்படி ஊர் பேர் தெரியாதவங்க கூடலாம், பீச்சுக்குப் போனா அது பேர் நல்ல குடும்பஸ்தர் இல்ல. அவள் கூப்பீட்டாள்னா …அவ ஒரு தே….மு…. நீ தே…பை…னா போய்டுறதுக்கு.”

“வார்த்தை மோசமா போகுது. இது நல்லா இல்ல”

“அந்தக் குடிகேடிச் சிறுக்கி எந்தக் கம்மனாட்டிக் கிட்டயோ ஏமாந்துட்டா.. அந்தக் கம்மனாட்டிக்கு நீங்க சித்தப்பாவா…..பெரிய பரோபகாரி,……. பீச்சுக்குப் போய்ட்டார்.”
இப்படி படபடவென்று பேசுவதாலேயே அவளது சகோதரிகள் அவளை “படபடத்தாள்” எனக் கூறுவர். நான் கல்லாய் சமைந்திருந்தேன்.

சற்று நேரம் என்னையே நான் கூனிக் குறுகும் படி பார்த்து இருந்தாள்.,
”மிஸ்டர் பரோபகாரி, இன்னக்கோ நாளக்கோன்னு வயசுக்கு வர பொண்ண வச்சுக்குட்டு இந்த வயசுல சபலமா?
பாவி……... பாவி, இதுதான் ஒங்க அண்ணா பையனா?” ஒரு போட்டோவைக் காட்டினாள்.

இதழ் கடையில் புன்னகை தேக்கி கண்களும் சிரிக்கும் வண்ணம் , நீலப் புள்ளி போட்ட முழுக் கை பனியனில் வண்ணப் படமாக இருந்த ராஜா என்னைப் பார்த்து சிரித்தான். இதில் ஏதோ சூது உள்ளது. நான் பலி கடாவாக ஆக்கப் பட்டு உள்ளேன் என்பது மட்டும் புரிந்தது. அவன் போட்டோ என் மனைவி கையில் எப்படி வந்தது. இவன் எப்படி என் அண்ணா பையன் ஆக முடியும்…. இத்தனை கேள்விகளும் எனது மூளையில் ஒன்றன் மீது ஒன்றாக சூப்பர் இம்போஸ் ஆகி தெளிவற்ற படத்தையே காண வைத்தது.
“இவன் ராஜா ஆச்சே. இவன் போட்டோ ஒனக்கு எப்படி கெடச்சுது?”

“அப்ப, இந்த பொறுக்கிய ஒங்களுக்கு நல்லா தெரியும்”….வக்கீல் மாதிரி வந்தது வினா.
தொடர்ந்தாள், ‘இங்கிலீஷ்ல ஒரு பழமொழி உண்டு. நீங்கதான் அடிக்கடி சொல்வீங்க. ஒன்னோட ஃப்ரெண்டு யாருன்னு சொன்னா நீ யாருன்னு நான் சொல்வேன். அந்த பொறுக்கி ஒங்களுக்கு ஃப்ரெண்டா? …..சொல்லுங்க…?

“இல்ல…பஸ்ல வருவான்..பார்த்திருக்கிறேன்”

“அவனிடம் எப்பயாவது வம்பு பண்ணீங்களா”?

“மொதல்ல ப்ரெண்டுன்ற, அப்புறம் வம்பு பண்ணானான்னு கேக்குற, சும்மா வளவளன்னு பேசாம விஷயத்தை சொல்லு” நான் சஸ்பென்ஸ் தாங்காமல் வெடித்தேன்.

“பெரிய பரோபகாரி…முட்டாள் மனுஷா” எனப் பட்டங்களை வாரி இறைத்துக் கொண்டே வீட்டின் பின் பக்கம் சென்றவள் உடன் திரும்பினாள்.. திரும்பி வரும்போது அவளுக்கு இரு புறமும் ராஜாவும் விமியும் வந்தனர்.

என்னைப் பார்த்ததும் சிரிக்கவும் முடியாமல், சகஜமாகப் பேசவும் முடியாமல் திரு திரு என வீழித்தனர். என் வீட்டிற்குள் அவர்களைப் பார்த்ததில் அதிர்ச்சி அடைந்த நான் இங்கு என்ன நடக்கிறது என அறியாமல் குழப்பத்தின் உச்சத்தில் சிகரெட்டின் துணையை நாடினேண்..

“இவன் ஒங்க அண்ணா பையன், இவள் ஒங்க கொழுந்தியா.. நல்லா இருக்கு இல்ல?
கிண்டலாக கேட்ட எனது மனைவி என் கையில் இருந்த சிகரெட்டை பிடுங்கி ஆஷ் ட்ரேயில் நசுக்கினாள். “ நாங்க கூட மனசு கஷ்டத்தில்தான் இருக்கிறோம். அதுக்கு சிகரெட் குடிச்சா சரி ஆய்டுமா?”

நான் அடிமையிலும் கேடு கெட்ட அடிமையாக மூன்றாம் மனிதர் முன் அவமானப் பட்டவனாக வெறுமையாகச் சிரித்தேன். விரக்தியில் வேரறுந்த வீழ்ச்சியே அச்சிரிப்பு.

“சொல்லேண்டா.. ஒங்க சித்தபாகிட்ட… நீ பெரிய ஆம்பிளையா இருந்தாலும் வயசுல சின்னவன். அதனால நீ எனக்கு குழந்தைதான். மரியாதையா நீயே சொல்றியா இல்ல நான்
சொல்லவா?” என மிரட்டினாள் ராஜாவை.

“இல்ல ஆண்டி, நானே சொல்றேன். …சார், மொதல்லா ரொம்ப சாரி சார். நாங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணிட்டோம். அனாவசியமா ஒங்க குடும்பத்துல குழப்பம் பண்ணிட்டோம்”.

“கொழப்பம் பண்ணது தெரியுது. அதான் ஏன்னு சொல்லு”— நான் கொஞ்சம் கொஞ்சமாக சுவாரசியமானேன்..

விமலா எனும் விமிக்கு தன் மீது ஒரு இது இருப்பதை உணர்ந்த ராஜா இரண்டே நாளில் அவளை தன் வழிக்கு கொணர்ந்து விட்டான். வேலைக்குப் போகும் பெண்களிடம் பழக்கம் உள்ள அவன், யார் யார் வீட்டு சாவியையோ வாங்கி வந்து விமியை அழைத்துச் சென்று
“இதுதாண்டா காதல்” எனக் காந்தருவ மணம் செய்து கொண்டான். பத்து நாட்களில் அவளை கை கழுவ எண்ணி ரூட் மாறிய அவன் என்னை அவனது சித்தப்பா என்றும் நான் எனது அண்ணனிடம் இந்த காதல் விவகாரத்தை கூறி விட்டதால் வீட்டில் அந்த காதலுக்கு பலத்த எதிர்ப்பு என்றும் சொல்லி அவளை ஏமாற்ற முயன்றுள்ளான். தினமும் விமியிடம் எனக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என அவளை சந்திக்கும்போதெல்லாம் கூறி இருக்கிறான்.

ராஜா கூறிய கற்பனை கதைப்படி அவனது சித்தப்பா ஆகிய நான் விமி பஸ்ஸில் வரும்போது பார்க்கும் பார்வையை அவர்கள் கதை தெரிந்து ஊடுருவிப் பார்க்கிறேன் என நினைந்து, என் குடும்ப வாழ்வை கெடுக்க எண்ணி, பொறி வைத்து இருக்கிறாள். நான் என்னை அறியாமலேயே முட்டாள் அடிக்கப்பட்டேன்.

“ரொம்ப சாரி சார். எல்லாம் நான் அவளை ஏமாற்ற நினைத்ததால் வந்த வினை. ஆனால் நான் அவளை இனிமேல் கைவிட மாட்டேன்” என்றான் ராஜா.

எனக்கு அவனையும் அவளையும் தூக்கிப் போட்டு மிதித்துக் கொன்று விட வேண்டும் போல் ஆத்திரம் வந்தது.

“ஓகே. ந்வ். போத் ஆப் யூ கெட் அவுட்” என்று மட்டும் கூறினேன்.

“அவங்க எங்கேயும் போக மாட்டாங்க, இங்கதான் இருப்பங்க” என என் மனைவி கூறினாள்.
“இவள் என்ன சொல்கிறாள்” எனப் புரியாமல் நான்
, “நம் சண்டையை அப்புறம் சாவகாசமா போடலாம். இதுங்க எதுக்கு அதுக்கு சாட்சியா. மொதல்ல தொரத்தி விடு இதுங்கள ,ப்ளாகார்ட்ஸ்” என கொப்புளிக்க ஆரம்பித்தேன்.

“ஹலோ, பரோபகாரி சார், கொஞ்சம் பொறுமையா இருங்க” என என்னை அடக்கிய என் மனைவி, “ நீங்க பொறுக்கியா ஆவறதுலேர்ந்து தடுக்கப்பட்டு இருக்கிங்க…. இந்த பெரிய பொறுக்கி திருந்தி இவளை கலியாணம் பண்ணிக்கிட்டான். அதுக்கு நாந்தான் சாட்சி….. அதுனால ஒங்க அண்ணன் பையனையும் ஒங்க கொழுந்தியாளையும் திட்டாதிங்க” எனக் கூறினாள்.

இவளுக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது என நான் எண்ணிக் கொண்டு இருக்கையில்,

“அன்கிள், ரொம்ப ரொம்ப சாரி அன்கிள், நீங்க ஒரு மிகப் பண்புள்ள மனுஷன்னு எனக்கு உறைக்க ஆரம்பிச்சுது. உடனே ஆண்டிக்கிட்ட உண்மையைச் சொன்னேன். ஆண்டி மொதல்ல என்னை தே. மு. னு திட்ட்னாங்க… வெளியே போடீன்னு துரத்திட்டாங்க
அப்புறம் நான் தெரு முணைல திரும்பறதுக்கு முன்னாடியே ஒரு ஆட்டோல வந்து என்னை ஏறச் சொல்லி ராஜா வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்க போனப்புறம்தான் தெரியும்.
இவர் ராஜா இல்ல, சாதாரண கூஜா. நைட்ல ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் இவர் நடத்தை சரி இல்லாதவர். எல்லாம் தெரிந்த ஆண்டி ஒங்க அண்ணாவை வீட்டுக்கு வரச் சொல்லி ராஜாவை மிரட்டினாங்க. போலீஸ் இன்ஸ்பெக்டரான ஒங்க அண்ணாவைப் பார்த்ததும் பயந்து போய் அவரும் கலியாணத்துக்கு ஒத்துக் கொண்டார். ஆனாலும், அவரை திருத்த முடியும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு…சாரி சார்…னீங்க ரொம்ப கொடுத்து வச்சவர் சார். இப்படி டாண் டாண்னு காரியம் செய்ற ஒரு மனைவி ஒங்களுக்கு இருக்காங்க… ஒங்க குடும்பத்தை போய்
குழப்பிடேன்னுதான் ரொம்ப வருத்தமா இருக்கு.”

“ரொம்ப அவர் மேல கவலைப் படாதம்மா… அவரை நான் பார்த்துக்கிறேன். மொதல்ல ஒரு அப்ளிகேஷன் எழுதிக் கொடு. சித்தப்பா ரெண்டு பேர்க்கும் நல்லதா ஏதாவது வேலை வாங்கி கொடுப்பார்.

இவளால் எப்படி இவர்களை மன்னிக்க முடிந்தது. எப்படி உதவ முடிகிறது.--- உண்மையில் பயித்தியக்கார பரோபகாரி இவளா அல்லது நானா?
ஒன்றும் புரியாமல் தைரியமாக நான் சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

“ என் மேல தப்பில்லன்னு தெரிஞ்சும் நீ ஏன் இப்படி வாய்க்கு வந்தபடி பேசினே” எனக் கேட்டேன்.

”தப்பில்லையா?—எனக்கூறி என் கையில் இருந்த சிகரெட்டைப் பிடுங்கி தன் உதட்டில் வைத்து நின்றாள். பின் திரும்பி என்னிடமே கொடுத்து விட்டுச் சொன்னாள்.

“தப்பிலையா… நான் சிகரெட்டை வாயில் வைத்ததுக்கே விழி பிதுங்கினீங்களே, சபலங்கறது
ஆண் பெண் எல்லாத்துக்கும் உண்டு. சபலம்னா என்னன்னே தெரியாமல் நீங்க விழுந்ததுதான் எனக்கு தாங்க முடியல. அதோட ஆழம் என்ன, பரிமானம் என்ன ஒங்களுக்குத் தெரிய வேண்டாமா? அதான் அவ்வளவு சீக்கிரமா மன்னிசதா கூட என்னால காட முடியல:”

“ நீயே எனக்கு சபலம் சந்தான கிருஷ்னன்ன்னு பேர் வைச்சிடுவே போல இருக்கே

“அது யார் அது சந்தானக் கிருஷ்னன்”?

“அது ஒரு பெரிய கதை” எனக் கூற முற்பட்டபோது,
“மொதல்ல இந்த ஊரார் கதை, ஊர்ப் பொண்ணுங்க கதை இதையெல்லாம் கேக்குறத விடுங்க. உருப்படியான காரியமா ஏதாவது செய்ங்க.

“சரிங்க” என லிவிங்ஸ்டன் பாணியில் நான் பாடினேன்.”.
.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (20-Mar-14, 11:24 am)
பார்வை : 214

மேலே