வாடா தம்பி வாம்மா தங்கச்சி

வாடா தம்பி..!
வாம்மா தங்கச்சி..!
புரட்சி ஒன்று செய்வோம்.
மறுமலர்ச்சி ஒன்று பார்ப்போம்-உலகை
மிரட்சியடைய வைப்போம் -எழுச்சி
காட்சிதனை திரையிடுவோம்.

புது அரசியல் என்று சமைப்போம்.
புது ஆட்சி ஒன்று நிறுவுவோம்.
புதுப்புது சிந்தனையை ஏற்றுவோம்.
புத்தம்புது மாற்றத்தினை உருவாக்குவோம்.
வாடா தம்பி..!
வாம்மா தங்கச்சி...!

சாக்கடை அரசியல்
என்று ஒதுங்காதே தம்பி -நம்
வாழ்வாதாரம் அதில்
இருக்குதே பாரு தங்கச்சி.

உண்ணும் அரிசியும்
உடுக்கும் துணியும்
இருக்கும் இடமும்
குடிக்கும் நீரும்
எல்லாம் உனக்கு
கிடைப்பது எதுனாலே ?
நிர்வாகம் என்னும்
அரசியல் இல்லையென்றால்
எப்படிவரும் தன்னாலே ?

உணர்ந்து வாடா தம்பி..!
தெளிந்து வாம்மா தங்கச்சி..!

உடல் என்பது வாழ்வு.
உயிர் என்பது அரசியல்.
உயிரை வெறுத்து
உடலை வளர்க்க முடியாதே தங்கச்சி !

எழுதுகோல் என்பது வாழ்வு.
மை என்பது அரசியல்.
மை இன்றி
எதையும் எழுத முடியாதே தம்பி !

நாம் கட்டும் வரிகளில்
கொழுத்து திரியும்
அரசியல் நாய்களை பாரு.
நாம் போடும் வாக்குகளில்
ஜனநாயக கண்ணகி
சேலை கிழியுது பாரு..!

பொறுத்து வேடிக்கை பார்க்கலாமா?
பொங்கி கற்பை காக்க வேண்டாமா?
நம் உடலின் இரத்தம் குடித்து
நம் உயிரை கொல்லும்
இந்த கயவர்களை விடலாமா?

சொல்லு தம்பி...!
சொல்லு தங்கச்சி..!
எழுந்து வா...!
எழுச்சியுடன் வா...!

புதுரத்தம் பாய்ச்சி
புனித அரசியல் படைப்போம்..!
வாடா தங்கச்சி...!
வாம்மா தம்பி....!

எடு எழுதுகோலை..!
தொடு போர் ஒன்றினை....!

அக்னி குரல் ஒன்றின்
வீரமுழக்கம் கேட்கிறதா...!
அதோ பார்..!
நம்மை வழிநடத்த
கம்பீரமாய் நிற்கிறான் பார்...!
நம் ”பாட்டன்” பாரதி.



-------------------இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (20-Mar-14, 3:26 pm)
பார்வை : 709

மேலே