உதிரிப் பூக்கள் உனக்காக

உனக்காய் ஒரு கவிதை செய்ய
ஊரெல்லாம் சுற்றி வந்தேன் ...

தென்றலின் ஈர வாடையின்
இடைவெளியில் கதகதப்பு...

பறவைகளின் சிறகடிப்பில்
பாட முடியாத புதிய ராகம்...

மரங்கள் ஆடிய போது
நிழல்களிலும் சலசலப்பு...

தெருவோரங்களில் நீர்த்தேக்கங்கள்...
நீர்த்தேக்கங்களில் நிலவின் நிழல்கள்...
நிலவின் அருகினிலே
நிசப்தமான என்னுருவம்...

நிலவே!
உனது மெய் பிம்பம்
எந்த நீரினில்
எழுதப்பட்டுள்ளது?

மழைக்குப் பின்
மௌன வானம் ...
மௌன வானத்திலே
மேகங்களின் கால் தடங்கள்...

வானவில்லைக் காணவில்லை!

உதிர்ந்த மலர்க்காம்பில்
காய்ந்த மகரந்தங்கள்...
உதிராத மலர்களிலே
வண்டின் கால் தடங்கள்...

எங்கிருந்தோ ஒலிக்கும் பாடல்...

பாடல் முடிந்ததும்
மீண்டும் என் மனசுக்குள்
சப்தமிடும் மௌனங்கள்...

கண்ணெதிரே கன்னிப் பெண்கள்...
காதுக்குக் கேட்காத உரையாடல்கள்...
இதழ்களிலே சிரிப்புகள்...
இடையிடையே மௌனங்கள் ...

என் மனசில் சலனங்கள்...

பேனாவில் மை சீக்கிரமாய்த்
தீர்ந்து விடும்!

என் மேசை விளக்கில்
ஆடிக்கொண்டே எரியும்
அழகிய சுடரும்
அணைந்து விடும்...

காற்றின் லீலைகள்...
தென்றலின் வாடைகள்...
உதிரிப் பூக்களாய்க் கற்பனைகள்...

உதிரிப் பூக்களை
ஒன்றாய்க் கோர்த்து
உனக்காக ஒரு
மாலை கட்ட வேண்டும்!

உனக்காய் ஒரு கவிதை செய்ய
ஊரெல்லாம் சுற்றி விட்டேன்...

உதிரிப் பூக்களாய்க் கற்பனைகள்!

29.10.1994

எழுதியவர் : மனோ & mano (21-Mar-14, 3:11 pm)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
பார்வை : 184

மேலே