தூங்கும் மனசு

முகவரியற்ற
கடிதமொன்றின்
வாசிக்கப்படாத
சுவாரஷ்யத்தைபோல
அர்த்தமில்லாமல் கிடக்கிறது
எனக்கான சந்தோசங்கள்.

விளங்கிக் கொள்ளமுடியாத
விளக்கமொன்றின்
விடுகதையைப்போல
விடியும்போதே
அஸ்தமனமாகிபோன
என் வைகறைகளே..
அறிவீரோ நீங்கள் என்
வாழ்க்கையின் கறை என்று.

கருத்து வேறுபாடுகளை
கட்டி அணைத்துக் கொண்டு
கட்டி அணைக்க
வேண்டிய என்னை
விட்டுப் பிரிந்து
ஆளுக்கொரு திசையில்
போனவர்களே..
என் திசையில் மட்டும்
இருளை பூசியது எதற்கோ?

கொள்ளி வைக்க
பிள்ளை தேடும்
உள்ளங்கள் இருக்க
பிள்ளை நெஞ்சில்
கொள்ளி வைத்த கொடுமைகளே..
பிழையான உங்கள்
வாழ்வினால்
சரியான என் வாழ்வில்
பிழையிட்டது எப்படி சரி?

இழந்த வாழ்வை
ஆறுதலாக்க
இன்னொரு மணமென்று
மாலைகளுக்காக
கழுத்தை மாற்றிக் கொண்டவர்களே..
என் தலை எழுத்தை
மாற்றியது ஏன்?

மாதமொருமுறை
பள்ளிக்கு வந்து
எனக்காய் பணத்தை
கட்டிபோகும்
கட்டாயங்களே
எனக்கான பாசத்தை
எங்கே கட்டி வைத்தீர்கள்?

என் அம்மாவினதும்
என் அப்பாவினதும்
கைபிடித்துக் கொண்டு
உல்லாசமாய் நடைபோட
எனக்கும் ஆசை.

அம்மா உன் புருஷனை நீயும்
அப்பா உன் மனைவியை நீயும்
விட்டுவிட்டு நீங்க
என் பெற்றோராய் இருக்க
ஏங்குது என் மனசு.
ஆனால் என் ஏக்கம் புரிந்தும்
ஏனோ இன்னும்
தூங்குது உங்க மனசு.?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Mar-14, 4:04 pm)
Tanglish : thoongum manasu
பார்வை : 217

மேலே