பார்வை ஒன்றே போதுமே

ஆபீஸ் ரிசப்ஷன் நிரம்பி வழிந்தது.
நேர்முகத்தேர்வு பத்து மணிக்குத்தான் என்றாலும் எட்டு மணிக்கே அனைவரும் வந்து விட்டார்கள் போல என்று எண்ணியபடி தன கேபினை நோக்கி நடந்தான் வினோத்.

ஹாய் வினோத்.. என்ன இன்னிக்கு ஒரே சந்தோசம் , உனக்கு ஒரு பி ஏ கிடைக்கப் போறாங்கன்னா...அதான் இன்னிக்கு ரிசப்ஷன் பூரா ஒரே பொண்ணுங்களா இருக்காங்களா ...பாத்துப்பா .உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு தெரிஞ்சா எல்லோர் மனசும் உடைஞ்சுடப் போவுது " என்று கிண்டலடித்தபடி உள்ளே வந்தான் நண்பன் நீலேஷ்.
ஹேய் ..சும்மா இருப்பா.. நீ வேற.

இன்னிக்கு எப்படித்தான் இண்டர்வ்யூ நடத்தப்போறேம்னு மலைப்பா இருக்கு , உன்னை நம்பி தான் இத்தனை பேரை வரச்சொல்லி இருக்காங்க ..." என்ற வினோத்தை அடிப்பது போல பாவனை செய்தான் நீலேஷ்.
நீலேஷும் வினோத்தும் கல்லூரி நண்பர்கள். கல்லூரி முடித்தவுடன் இருவருக்கும் இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட் கிடைத்து இப்போ இருவரும் மேனேஜர் ஆகிவிட்டனர் , நிறுவனத்தில் பி.ஏ வேலைக்காக இன்று ஆள் தேர்வு நடக்கிறது. இவர்கள்தான் தெரிவு செய்ய வேண்டும்.

இண்டர்வ்யூ ஹாலில் சென்று அமர்ந்தனர் .
மே ஐ கம் இன் சர்...அழகான குரலைத் தொடர்ந்து உள்ளே வந்தவளைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டான் வினோத்.
அவள் சைந்தவி..

கல்லூரி காலத்தில் வினோத்தின் கனவு தேவதை.
அவளைப் பார்க்கவே ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் கல்லூரி சென்று நல்ல பெயர் வாங்கியது நினைவு வந்தது. அவளுக்கே தெரியாமல் அவளை பின்தொடர்வதும் அதை அவள் கண்டும் காணாதது போல இருப்பதும் நண்பன் நீலேஷுக்குக் கூட தெரியாத ரகசியம்.
குடும்ப சூழ்நிலையால் அவள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டதும் இன்று மேனேஜர் பதவியில் இருக்க வேண்டிய அவள் வெறும் பி.ஏ வேலைக்காக அலைவதும் விதியின் விளையாட்டு

...'இல்லை இல்லை ..என்னையும் அவளையும் மறுபடியும் சேர்த்துவைக்க கடவுளாக கொடுத்த சந்தர்ப்பம்'.என்றது அவன் உள்மனம்
எல்லா கேள்விகளுக்கும் சுலபமாக பதில் சொல்லி அனைவரையும் அசர வைத்தாள் சைந்தவி .அவ்வப்போது அவனை ஒரு கடைக்கண் பார்வை பார்க்கவும் தவறவில்லை.
அவன் மனமோ தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது.
முடிவில் மூவரை செலக்ட் செய்தனர் . சைந்தவி மற்றும் இரண்டு ஆண்கள்.
மறுநாள் வீட்டிலிருந்து எட்டுமணிக்கே கிளம்பினான் வினோத் . அவன் மனைவி வினயா வித்யாசமாக பார்த்தாள்.

" இன்னிக்கு என்னாச்சுப்பா .. தினம் நீ எந்திரிக்கிற டைம்முக்கு ஆபீஸ் கிளம்பிட்டே .. "என்ற கேள்விக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தான் அவன்.
அவனுக்குத்தெரியும் ...அவன் இப்படி புன்னகைத்தால் வினயா அப்படியே சிலையாகிவிடுவாள் என்று. சிலைக்கு உணர்வு வருவதற்குள் வேகமாக வெளியேறினான் அவன் .
வழி நெடுகிலும் சைந்தவி பற்றிய இனிய நினைவுகள்.

'எப்படியும் அவளை எனக்கு பி.ஏ வாக போடச் சொல்ல வேண்டும். நான் ரொம்ப சின்சியர் என்பதால் ஜி.எம் என் பேச்சைத் தான் கேட்பார். அவள் அருகில் இருப்பதே தனி சந்தோசம் தானே' .என்று எண்ணமிட்டவாறே ஆபீசை அடைந்தான் வினோத்.

உள்ளே நுழைத்ததும் புதிதாக செலக்ட் ஆன மூவரும் வந்திருந்தனர்.
அதிலும் சைந்தவி அவனுக்குப் பிடித்த மஞ்சள் வண்ண சேலையில் தேவதைபோல் ஜொலித்தாள்.
அவனுக்கு ஏனோ வினயா நினைவு வந்தது. திருமணத்துக்கு முன் தமிழ் டீச்சராக இருந்தவள் அவள்.திருமணத்துக்குப் பின் எவ்வளோ வற்புறுத்தியும் அவள் வேலைக்குச் செல்லவில்லை.

"வேலைக்குப் போகணும்னா உன் ஆபீஸ்ல வேலை போட்டுக்குடு . உன்னை பார்த்துக்கிட்டே இருக்கனும்டா செல்லம் ..." என்றாள்
அதற்குப்பின் அவளிடம் வேலை என்ற பேச்சையே எடுப்பதில்லை அவன் .
யோசனையுடன் அவன் நடக்க "ஹாய் வினோத் எப்படி இருக்கீங்க" என்றபடி அருகில் வந்தாள் சைந்தவி .

"என்னை இன்னும் ஞாபகம் இருக்கா" என்று புன்னகைத்தான் வினோத். .
தலை சாய்த்து சிரித்தாள் அவள் ."உங்களைப் போய் மறக்க முடியுமா.. ஆனா நீங்கதான் எல்லாத்தையும் மறந்துட்டீங்க".
"ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை",பேசிக்கொண்டே இருவரும் நடக்க ஜி. எம் கார் வந்து நின்றது.

"ஒகே ஜி. எம் வந்துட்டார் , நான் போய் அவரு கிட்ட பேசிட்டு வந்துடறேன்". என்றபடி ஜி. எம் அறைக்குச் சென்றான் வினோத்.
"வா வினோத். உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் சைந்தவியை உனக்குக் கீழே போடலாம்ன்னு இருக்கேன் உனக்கு ஏதாவது அப்ஜெக்ஷன் இருந்தா நாளைக்குள்ள சொல்லலாம்" என்றார்.

ஆஹா ..பழம் நழுவி பாலில் விழுந்தது என்று நினைத்துக் கொண்டே ஒகே சார், நோ அப்ஜெக்ஷன் சார்" என்று திரும்பினான் வினோத் .
மனம் வானம் நோக்கி சிறகடித்தது.இனி நாள்தோறும் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். . மனசாட்சியோ நீ செய்வது தப்பு என்று ஒரு பக்கம் இடித்துகொண்டே இருந்தது.
'இதில் என்ன தப்பு வெறும் பார்வை தானே' என்றது மனம்.

'அப்போ வினயா வேறு யாரையாவது பார்த்தால் உனக்கு பரவாயில்லையா' என்றது மனசாட்சி. மனசுக்கும் மனசாட்சிக்கும் நடந்த போராட்டத்தில் தலைவலி மண்டையை பிளக்க ஒருவழியாக இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குச் சென்றான் வினோத் .
காலிங் பெல்லை அழுத்தினான் .

எப்போதும் ஓடிவந்து கதவைத் திறக்கும் வினயா ஏனோ பலமுறை பெல் அடித்தும் திறக்கவே இல்லை . தன்னிடம் இருக்கும் இன்னொரு சாவியைக் கொண்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான் வினோத்.
உள்ளே சென்றவுடன் மீண்டும் அழைப்புமணி ஒலிக்க அலுப்புடன் சென்று கதவை திறந்தான். வெளியே அகிலன் நின்று கொண்டிருந்தான்.
"உள்ளே வாங்க அகிலன்". என்று வரவேற்று அமர வைத்தான்.

"அப்புறம் அகிலன். எப்படி இருக்கீங்க".
"பைன் வினோத். நான் பத்துநிமிடம் முன்னாடியே வந்துட்டேன். உங்க காலிங் பெல் ஏதாவது ப்ராப்ளமா? எத்தனை முறை அடிச்சாலும் திறக்கலே . வினயா எங்கே? என்று சரளமாக கேட்டுக்கொண்டே போனான் அகிலன்.
"வினு ..என்று குரல் கொடுத்தான் வினோத். சற்று நேரம் மறு பேச்சில்லாமல் போகவே அவனே உள்ளே சென்றான் .

வினயா டிரெஸ்ஸிங் ரூமில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
நான் அழைத்தது கேட்டிருக்கும். பிறகு ஏன் வரவில்லை? என்று எண்ணியபடி "என்னாச்சுடா வினு...அங்கே யார் வந்திருக்காங்க தெரியுமா? உன் அத்தைப் பையன் அகிலன். வா.. போய் பார்க்கலாம்" என்றான் வினோத்.

மறுப்பாக தலையசைத்தாள் வினயா.
" இல்லைப்பா ..அவனை நான் பார்க்க விரும்பலை" என்றாள் மெல்லிய குரலில்.
அவன் புரியாமல் பார்க்கவும்
"உனக்குத் தெரியுமா...சின்னதிலிருந்தே அவனுக்குத் தான் என்னை கட்டிவைக்கனும்னு வீட்டிலே எல்லோரும் சொன்னதாலே என் மேல ஒருதலையா நேசம் வச்சிருக்கான் அவன். அவன் என்னை மறக்கலேன்ன்றது அவன் இன்னும் கல்யாணம் வேண்டாம்னு இருக்கறதிலேயே தெரியுது. இப்போ நான் அவன் எதிரே வந்தாலும் அவன் மனசுல பழைய நினைப்போடதான் என்னைப் பார்ப்பான்.

உன்னைத் தவிர வேறு யாரும் என்னை ஆசையா பார்த்தாக் கூட எனக்குப் பிடிக்காது. நான் வேலைக்குப் போகாததே அதனாலதான். ப்ளீஸ் எனக்குத் தலைவலின்னு சொல்லி நீயே அவனை அனுப்பிட்டு வந்துடுப்பா" என்றபடி இல்லாத தலைவலிக்கு தைலத்தை எடுத்து தேய்க்க ஆரம்பித்தாள் வினயா"

'பார்பதிலே என்ன தப்பு?' என்று மனதில் நினைத்தவாறே "இருந்தாலும் நீ ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறே" என்றான் அவன்.
"சில்லியா பேசாதேப்பா.உனக்கு ஒரு திருக்குறள் தெரியுமா?
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இல்"
ஒரு பொருள் நம்மது இல்லேன்னா அதை அதோட மறந்துடணும். திரும்பத் திரும்ப அதைப் பார்த்துக்கிட்டே இருந்தா அதோட நினைவுகள் நமக்கு மறக்காது. அதனால நமக்குத் துன்பம்தான்.அது அவனுக்குப் புரிய மாட்டேங்குது. அதனால தான் நான் அவனை அவாய்ட் பண்ணறேன்.புரியுதா?"

என்றாள் அவள் தெளிவாக.
"புரிஞ்சுதுங்க டீச்சரம்மா ..." என்று கேலியாய் சிரித்தாலும் அவனுக்குள் ஏதோ சுருக் கென்று தைத்தது. அது வேறு ஒன்றுமில்லை. அவன் மனசாட்சிதான். சிந்தனையில் ஆழ்ந்தான் அவன்.
மறுநாள் பழையபடி பத்துமணிக்கே ஆபீஸ் சென்ற வினோத் நேரே ஜி.எம் அறைக்குச் சென்றான்.
சார் ஒரு சின்ன வேண்டுகோள்.

நீங்க எனக்கு பி எ வா போட்டிருக்கிற சைந்தவி என்னோட கிளாஸ்மேட் , அதனால என்னால அவுங்களை அதட்டி வேலை வாங்க முடியாது சார். அவுங்களை ஹெட் ஆபீஸ்ல போட்டுட்டு எனக்கு பிரகாஷ் ன்ற பையனை பி எ வா போட்டுடுங்க சார் , ப்ளீஸ் " என்றான்.
வினோத் கேட்டு எதையுமே மறுக்காத ஜி எம் இதையும் ஒப்புக்கொண்டார்.
நிறைவுடன் திரும்பினான் வினோத்

நன்றி '; ரோஜா (நிலாமுற்றம் )

எழுதியவர் : ரோஜா (25-Mar-14, 7:31 pm)
பார்வை : 194

மேலே