ஆதவனே எனை ஆளா வா

காலை கதிரவனை நான் கண்டேன்!
வறுமை கோடுகள் அடி வானத்தில்
கண்கள் சிவசிவக்க மெதுவாய்
விழித்தெழ நான் கண்டேன்...!

தங்கை பாசத்தாலே...
தன் பங்கையும் தந்துவிட்டு
கலங்கி நிற்கும் சோதரன் போல்
காலை கதிரவன் வர நான் கண்டேன்...!

விழி விரித்தால் புவி எரியும்
புவியே தமக்கையாய் ஆனதெண்ணி
மெதுவாய் மலரும் ...
கடல் தாயின் நாயகனே !

எல்லா வளமும் புவிக்கு தந்து
ஏக்கமுடனே பார்த்திட நான்கண்டேன்!
மறுவீடு புகும் பெண்போலே
புவியவள் நகர்ந்து சென்றிட நான் கண்டேன்!

துணையாய் வெள்ளி நிலவை கொண்டும்
கண்கலங்கி....
பெருந்தன்மையாய் கதிரவன்
நின்றிட நான் கண்டேன்...!

நின் கவலை தீர்த்து
மேலெழும்ப வேண்டும்
உன் தமக்கை வாழ்க்கை சிறக்க
உள்ளன்புடன் தந்தவன் நீயே!

மலர்களெல்லாம் உன்முகம்
காணா வாடும்
வள்ளலான ஆதவனே !
வந்துதிக்க வேண்டுகிறோம் !

சிவக்கும் உன்கண்ணை சிரிக்கச் செய்து
பார்க்கும் கண்ணை குளிரச் செய்து
மடிதாங்கி நிற்கும் மலர்களெல்லாம்
பூக்கச் செய்து வலி தீர்க்கச் செய்வாய்!!

பழிச்சொல் கேளா ஆதவனே !
பயிர்கள் வாடிடக் நீ கண்டு
வந்திட வேண்டும் பாரினிலே...!

செங்கரும்பு பொங்கலிலே
முதல் பூஜை உனக்குத் தானே
நம்பினோர்க்கு நீ கடவுள் தானே!!
நல்லோர் வாழ நீ வரவேண்டும் !!

மனிதர் மாசுகளை அள்ளி வீசி
உன் மேனியெங்கும் ஓட்டையாச்சு!
உன்னுள் கொதிக்கும் இரத்தம்
வெளிச் சிந்தாதிருக்கட்டும்...!!

எத்தகைய கோபத்தையும்
அடக்கி ஆளும் அரசன் நீயே!
காலமெல்லாம் காத்திடும் கடன்
இருக்கு உனக்கு ...!

இழந்த தமக்கை பாசத்திற்காக...
ஏங்கி மனம் வெம்பிடாதே !
இருக்கும் உலகமும் உனக்கே சொந்தம் மறந்திடாதே !

எழுதியவர் : கனகரத்தினம் (30-Mar-14, 1:27 pm)
பார்வை : 81

மேலே