அன்னை

அதிகாலைப் பொழுது
ஆதவன் வருமுன்னே
அடுப்படி வேலையிலே
ஆர்வமுடன் இருப்பாள்
அனுதினமும் அவள்.

அரைக்காப்படி அரிசியை
அளந்துவிட்டு எடுத்துக்கிட்டு
அரித்து அரித்து இடுவாள்
உலையில் அழகுடன்
இழையில் அன்னமிட‌‌
ஈன்ற மக்களுக்கு.

விடியல் விழிக்கும் முன்னே
விழிப்புடன் விரைவாள்
இல்லத்தின் முற்றத்தின்
இலை தழை நீக்கி
சேத்து வைச்ச சாணங்கொண்டு
செழுமையடையச் செய்வாள்
சேவல் கூவும் முன்னே !.

தேயிலைப் பொடியை
தெளிந்த வெந்நீரில்
தேவைப்படி சேர்த்துக்கொண்டு
கருப்பட்டியும் கையுமாய்
கடப்பாள் எழுப்ப‌
கட்டிய கணவனை
கட்டிலிருந்து.

பெற்ற முத்துக்கள்
பெருமையுடன் பள்ளி செல்ல‌
பரப்பாள் பம்பரமாய்
பாசத்தைப் பகிர்ந்து கொண்டே !.

அத்துனையும்
அழகுடன் முடித்துவிட்டு
அமரக்கூட முடியாமல்
அவசரத்தில் பழைய சோறைப் பிளிந்து
பசியைவிரட்டிக்கொண்டு
ருசியை மறந்துவிட்டு
வேலைக்குச் செல்வாள் வெகுமதியுடன்
வேலை நேரம் விரையும் முன்னே !.

ஆதவன் அஸ்த்தமிக்கும் நேரம் வரை
ஆடவன் போல்
அயராமல் உழைத்துவிட்டு
குருவி கூடுகட்டக்
குச்சிகளை சேர்ப்பதுபோல்
சுள்ளிகளைச் சுமந்து வருவாள்
சுடுதண்ணீர் இட்டுத்தர.

சுட்டெரிக்கும் சூரியனோ
சுடர் ஒளிதனை மறைக்க‌
இருள் சூழ்ந்த இரவோ
இந்திரனை அழைக்க‌
சிரிப்பும் களிப்புமாய்
சிறிது நேரம் இருந்துவிட்டு
சின்னவன் பெரியவன்
கட்டியவன் கடைக்குட்டி என‌
ஆக்கிய அன்னத்தை
அனைவரைக்கும் பகிர்ந்துவிட்டு
ஆயிரம் கனவுகளுடன்
அசதியுடன் கிடப்பாள்அடுத்த நாள்
அதிகாலையில் எழ !..

நாளும் கிழமையும் மட்டும்
நாளுக்கு நாள் மாற‌
அவள் மட்டும் அதே முயற்சியுடன்
அயராத உழைப்புடன்
ஆண்டவனே அதிசியக்கும் வண்ணம் !..

பெண் என்ற பிறப்பிலா ?
இல்லை
பெற்றவள் என்ற சிறப்பிலா ?
ஏன் உனக்கு மட்டும் இத்துனை
பொறுப்புகள் பொறுமையுடன்
பொலிவடைந்த பொக்கிஷமாய் !..

எத்துனை செய்தாலும்
ஈடு இணையில்லை
எனை ஈன்ற என் அன்னை அவளுக்கு !..

அவள் வாழ்க்கை
அர்த்தமுள்ளதாக என்செய்வேன்
அவள் மைந்தன் நான்
இன் முகம் மாறாமல்
இவ்வண்டத்தில் !.

எழுதியவர் : (21-Feb-11, 11:01 pm)
பார்வை : 465

மேலே