ஒரு காத்திருப்பு வீரிய தமிழ்ப் படகொன்றுக்காய்… அகன்
தப்பலைகள் அற்ற
சரிநீர் சமபரப்பில்
எப்போது வரும்
என ஒரு காத்திருப்பு
வீரிய தமிழ்ப் படகொன்றுக்காய்…
ஆன்ம அழுக்கெலாம் கழுவி
அகலப் பரப்பில் அன்பு தழுவி
சூன்ய சூத்திரத்தின் பகை நீக்கி
சூழும் இனப்பற்று இருத்தி …..
எப்போது வரும்
என ஒரு காத்திருப்பு
வீரிய தமிழ்ப் படகொன்றுக்காய்…
மீன் கூட்ட எண்ணிக்கை மிஞ்சும்
மின்னும் மறவர் கூட்டம் நிரப்பி
வானுயர எல்லை வகுத்து
வாள் தூக்கும் வலிமை தாங்கி…
எப்போது வரும்
என ஒரு காத்திருப்பு
வீரிய தமிழ்ப் படகொன்றுக்காய்…
போதிமரத் தத்துவங்கள் எல்லாம்
பொய்யாகிப் போன தருணங்களின்
மீதியாய் மிஞ்சிய மானுட வேர்களுக்கு
மீளும் உயிர் சத்து வாரி….
எப்போது வரும்
என ஒரு காத்திருப்பு
வீரிய தமிழ்ப் படகொன்றுக்காய்…
திராவகத் தெப்பத்திலும் நீந்தும்
திராணிக் கொண்ட தடந்தோள்களும்
அக்கினிக் குண்டலத்தில் கை அமிழ்த்தி
ஆற்றல் கங்குகளை அள்ளி எடுக்கும் கைகளும். ....
எப்போது வரும்
என ஒரு காத்திருப்பு
வீரிய தமிழ்ப் படகொன்றில்………
இனப்பற்று இல்லா இதயங்களை
இங்கிருந்து திருத்தும் பாடங்களும்..
தினந்தோறும் அஞ்சியஞ்சி அல்லலறும்
திக்குகளுக்கு வீரமளிக்கும் வரங்களும்……
எப்போது வரும்
என ஒரு காத்திருப்பு
வீரிய தமிழ்ப் படகொன்றில்………
அமைதியென்பது இருவழிப் பாதை என
குமுறும் கடற்பரப்பில் முழங்கிட-அர்த்தம்
கமழும் அகராதிகளின் அணிவகுப்பில் - அவனிக்கும் நமக்கும் என
பரப்புரை மணக்கும் சொல்லெடுத்து...
எப்போது வரும்
என ஒரு காத்திருப்பு
வீரிய தமிழ்ப் படகொன்றுக்காய்…
வரவேண்டுமென்பதே நமது தவமாய்
வரும் என்ற நம்பிக்கையே உரமாய்
கரமிணைத்து கண்கள் விரித்து –ஒரு
கற்றைப் புன்னகை ஏந்தி வாருங்கள்...
எப்போது வரும்
என ஒரு காத்திருப்பு
வீரிய தமிழ்ப் படகொன்றுக்காய்…