காதல் அந்தாதி
விழிவழி என்னுள்ளே வருகை தந்தாய்
மொழிவழி மாலையின் அர்த்தம் சொன்னாய்
மனவழி நடந்து வென்றிடச் செய்தாய்
உன்வழியில் கைகோர்த்து நடக்கிறேன் பூவே !
பூவே புன்னகை பூக்கும் புதுமலரே
நாவினில் தேனே நயனங்களின் மானே
வானைத் தொட்டிட மனம் தந்தாய்
வாழ்வினிற்கு உன்கரம் தந்தாய் காதலே !
காதலே கவிதையில் வரும் தேவதையே
பாதையில் நின்றவனைப் பார்வையால் வென்றாய்
ஆதலினால் அந்திப்பொழுது நமக்கு என்றாய்
பாதை நீ விரித்த மலர்வீதி மானே !
மானே மாலை வானத்து மஞ்சள்நிலாவே
தேனே தெவிட்டா தீந்தமிழ்ச் சுவையே
ஏனோ ஒருமாலையில் என்னைப் பார்த்தாய்
தேனோடை பாயுதடி நெஞ்சினில் பூங்குயிலே !
பூங்குயில் புரியும் புன்னகை
-------------------விரியும் புதுக்கவிதைப் புத்தகம்
மாங்கனிக் கன்னம் மச்சம்
------------------கோலோச்சும் மன்மத அரசாங்கம்
தேனிதழ்கள் இரண்டும் இன்பத்
------------------தேனாறு பாயும் பிரவாகம்
நானிழந்து நின்றேன் என்னை
------------------இவள் கயல் விழியோரம் !
கயல் விழியோரம் காதல் சொன்ன நேரம்
புதுத் தென்றல் வீசிய பொன்னந்திநேரம்
புயல் வந்த மாலையிலும் தவறாமல் வருவாய்
அது தந்த உறவன்றோ நீ என்னுயிரே !
கயல் விழியோரம் காதல் சொன்ன நேரம்
புதுத் தென்றல் வீசிய பொன்னந்திநேரம்
புயல் வந்த மாலையிலும் தவறாமல் வருவாய்
அது தந்த உறவன்றோ நீ என்னுயிரே !
உயிரே உணர்வுகளால் எழுதிய காதல் உயிலே
வெயில் காலத்தில் வந்து வீசும் குளிர்த்தென்றலே
பயிர் பசுமை போல் வாழ்வில் வந்த வளமே
உயிரின் உயிரே உள்ளத்தில் துடிக்கும் உணர்வே !
உணர்வுகள் பூக்கும் மனமலர்த் தோட்டமோ
கனவுகள் விரிக்கும் காதல் பூம்பொழிலோ
உணர்வுகள் பேசா இதழ்களின் மௌனமோ
நினைவில் நடப்பவளே வாழ்வில் வளர்நிலவே !
வளர் நிலா நிலா வானிலா என் வாழ்விலா
வளர் மலர் மலர் பூவனத்திலா என் மனத்திலா
வளர் கனா கனா உன் நெஞ்சிலா என் கவியிலா
வளர் காதல் காதல் சொல் சொல் நம் நெஞ்சிலா !
நெஞ்சின் நினைவுகளை நீலவிழியில் எழுதுகிறாய்
நீலவிழியில் மௌன மொழி பேசுகிறாய்
மஞ்சள் வான சங்கம மாலை எழிலே
காலமகள் எழுதிய கவின் ஓவியமே !