தைமகளோ சித்திரைமகளோ வரவேற்போம்

சித்திரை பிறந்தாவது நித்திரை கலையட்டும்
சிறுநரி கூட்டங்கள் புறமுதுகுடன் ஓடட்டும் !
தைமகளோ சித்திரை திருமகளோ வரும் மகள்
மையம் கொண்டுள்ளது மனதிலே ஒரு புயல் !
செப்பிடும் மனங்கள் செவ்வனே விளக்கட்டும்
செவிமடுங்கள் உலகோரே அதுஉங்கள் விருப்பம் !
புத்தாண்டு தினமல்ல தினந்தோறும் நடக்கட்டும்
புதுமைகள் பிறந்திட்டு புதுப்பாதை அமையட்டும் !
கருமேகங்கள் கலைந்து காரிருள் நீங்கட்டும்
கருவிலே கலையாத உயிர்களும் மகிழட்டும் !
நலிவற்ற உள்ளங்கள் பொலிவுடன் வாழட்டும்
வலிவுற்ற நம்நாடும் செழிப்புடனே திகழட்டும் !
அரசியல் காழ்ப்புணர்வு அஸ்தமனம் ஆகட்டும்
அரசாங்க திட்டங்கள் மக்களுக்கு கிட்டட்டும் !
விளைநிலங்கள் விலைபோகாமல் நிற்கட்டும்
விளைச்சலும் பெருகி அரும்பசி போக்கட்டும் !
தடையிலா மின்சாரம் நிரந்தரம் ஆகட்டும்
தவித்திடும் உயிர்களின் தாகமும் தீரட்டும் !
கல்லாமை இல்லாமை இல்லாது மறையட்டும்
களவுகளும் கற்பழிப்பும் காணாமல் போகட்டும் !
உதவிடும் உள்ளங்கள் உலகிலே உயரட்டும்
உண்மைகள் நிலைத்து பொய்கள் அழியட்டும் !
செய்நன்றி மறவாதோர் செங்கோட்டை ஆளட்டும்
வாய்ப்பளித்த மக்களுக்கு நல்வாழ்வு வழங்கட்டும் !
தைமகளோ சித்திரை திருமகளோ வரவேற்போம்
வையகம் வாழும்வரை தமிழை வளர்த்திடுவோம் !
பழனி குமார்