கூற்றுவன் கூப்பிட்டால்

பாசக்கயிறு காலன்வீசி
பரலோகம் அழைக்கும்போது
பணம்காட்டி மறலியிடம்
பேரம்பேச முடியுமா ...??

மரிக்கமாட்டேன் இன்றென்று
மமதையால் மறுத்தாலும்
மன்றாடிக் கேட்டாலும்
மரணவோலை போய்விடுமா ....??

கூடிசுற்றம் அழுதாலும்
கூப்பாடுபோட்டு தடுத்தாலும்
கூற்றுவன் கூப்பிட்டால்
கூடத்தானே போகவேண்டும் ....??

மாற்றாக ஓருயிருக்கு
மற்றோருயிர் தயாரெனினும்
அவ்வுயிர்விடுத்து இவ்வுயிரெடுக்க
அந்தகனும் சம்மதிப்பானோ .....??

இப்புவியில் பிறவியெடுத்தால்
இறந்துதானே ஆகவேண்டும்
இரக்ககுணம் எமபடரிடம்
இருக்குமோ எள்ளளவும் .... ??

மரணத்தை எதிர்கொள்ள
மனதிலே துணிவுவேண்டும் !
மரணமிலா பெருவாழ்வுகிட்ட
மகேசன் அருள்வேண்டும் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Apr-14, 10:09 pm)
பார்வை : 424

மேலே