நான் விவசாயி பேசுகிறேன்
நான் விவசாயி பேசுகிறேன்!!!
தொன்று தொட்ட காலம் முதல்
சென்று சேரும் காலம் வரை
என்றும் நாங்க அறிந்த தெல்லாம்
சோறு போடும் விவசாயம் தானடா!
எருது பிடித்து ஏர் பூட்டி
கூட்டெரு உடன் சேர்த்து
அதிர ஒட்டி ஆழ உழுது
குதிர நெறச்சு வெச்சோமடா!
பலகை பிடித்துப் பார் கோதி
அளவெடுத்தாற் போல் வாய்க்கால் வெட்டி
கவலை யோட்டி நீர் பாய்ச்சி
வயல யிழுத்து கட்டினோமடா!
சோத்தில் நீங்க கைய வெக்க
சேத்தில் நாங்க கால வெச்சு
நெத்தி வியர்வை நெலத்தில்விழ
தினம் நேர்த்தியாக பொழச்சோமடா!
அங்க இங்க சேர்த்து வைச்ச
காசுதான வெதநெல்லும் உரமும் ஆச்சு
தங்கத் தாலி அடகு வெச்ச
காசுதான தினக் கூலி ஆச்சுதடா!
கல்லுலையும் முள்ளுளையும்
இராப் பகலா பாடு பட்டு
விளைச்ச தெல்லாம் ஊடு சேர்க்க
ஊரெல்லாம் கடன் பட்டுப் போனோமடா!
ஏவாரி வந்திறங்கி தரம் பிரிச்சி
எடை போட்டுக் கொடுத்த பணம்
பார்க்கையிலே போட்டதுமே மிஞ்சலையே
வாங்கின கடன்தானே மிச்சமாச்சடா!
காட்டுக்குள்ள பாதி விலை
சந்தையில இரட்டை விலை ஏசி
பெட்டிக்குள்ள இன்னும் தானே கூடிபோச்சே
எங்க பொழப்பு மட்டும் சுருங்கி போச்சடா!
வாங்கின கடன் கட்ட முடியாம
ஏங்குற புள்ளகுட்டி முகம்காண சகியமா
தொங்குறோம் நாங்க தூக்குல தான்
இதகேட்க நாதி ஏதும் இல்லையடா!
பட்டதெல்லாம் போதுமுன்னு நாங்க
பெத்தபுள்ள பிழைக்க ஒரு வழிதேடி
படிக்க வைக்க வேணுமுன்னு காடு
கழனி யெல்லாம் கூறுபோட்டு விட்டோமடா!
பகட்டு வாழ்க்கை வேணுமுன்னு
பணம் காச சேர்த்து வெச்சு நாளை
பஞ்சமுன்னு வந்து விட்டா
தஞ்சமுன்னு போக ஒரு வழியில்லையடா!
ஒரு வாய் சோத்துக்கும் ஏங்குற
காலம் இன்னும் தூரம் இல்லையடா!
அன்று தேடினாலும்
விவசாயி காண முடியாதடா!!!