பாராமுகம் 0தாரகை0

நீங்கள் மரணித்ததுண்டா?

நான் மரணித்திருக்கிறேன்

நீங்கள் மரண வலியை
தொண்டைக்குழியில் உணர்ந்ததுண்டா??

நான் உணர்ந்திருக்கின்றேன்

சென்னை சட்டக்கல்லூரி மாணவன்
காவல் அதிகாரியின் கண்முன்னேயே
மிருகத்தனமாய் தாக்கப்பட்டபொழுது

டெல்லி கடுங்குளிரில்
கற்பழித்து தூக்கியெறியப்பட்ட
நிற்பயாவின் நிர்வாண உடலை
நினைவில் கொண்டு வரும் பொழுது

குஜராத்தில் கர்ப்பிணிகளின்
வயிறு கிழிக்கப்பட்டு சிசுக்கள்
சிதைக்கப்பட்ட பொழுது

கோயம்பத்தூரில் தம்பிமார்களே
அண்டைவீட்டு அக்காமார்களை
அடித்து கற்பழித்தது கண்டு

கும்பகோண பள்ளித்தீவிபத்தில்
வெந்து கருகிய மாணாக்கர்களை
காப்பாற்ற முயலாத ஆசிரியர்களை எண்ணும்பொழுது

நான் மரணித்திருக்கிறேன்

மரணம் என்பது வலி
மரணம் என்பது அழுகை
மரணம் என்பது உணர்ச்சித் துடிப்பு

மனிதம் தொலைத்த மனிதர்களே!

உயிர் வேண்டுமா?
உவகையோடு தருகிறேன்
பெற்றுக்கொள்ளுங்கள்
பிறகும் என் பெண்களின்
மயிரை காணும் முயற்சியில்
அலைந்து திரியாதீர்கள்

உணர்ச்சி செத்த பிண்டமாய்
எனை பெற்றுக்கொள்ளுங்கள்
ஆனால்
புணர்ச்சி ஆசையில்
என் சகோதரிகளை
ரணமாக்கி பிணமாக்காதீர்கள்

நான் என்ன சாதியென
தெரிய வேண்டுமா?
அறுத்துப் பாருங்கள்
வேண்டுமென்றால்
குடித்து ருசித்து அறிந்துகொள்ளுங்கள்
இனிமேலும் என் இரத்த சொந்தகளை
துடிக்கவைக்காதீர்கள்

நான் எந்த இனமென
அறிய வேண்டுமா?
தூக்கிப்பாருங்கள்
தேவையென்றால் தூக்கிலும் இடுங்கள்
இனியும் மதச்சாயம் பூசி
நாங்களும் மனிதர்கள் என்பதை மறைக்காதீர்கள்

இப்போது சொல்லுங்கள்
ஆறியதா உங்கள் மனம்?
தெளிந்ததா உங்கள் போதை?

நாட்டை காலியாக்கி
சிறைகளை நிரப்புவதுமேன்?

வீட்டை இடித்துவிட்டு
மயானம் கட்டுவதேன்?

மேல்தட்டில் நின்று
கீழ்தட்டில் மூழ்கித் துடிக்கும்
சகபயணிகளை
வேடிக்கைப்பார்க்கும் நீங்கள் மறந்தது
நாம் அனைவரும் ஒரே படகில்
பயணிக்கின்றோம் என்பதை

காணாமல் போனதை அல்லது
அழிந்து போனதை
தேடிப்பிடியுங்கள் இல்லை
புதிதாய் கண்டு பிடியுங்கள்
மனங்களில் மரித்துப்போன
மனிதத்தை!!!

எழுதியவர் : தாரகை (26-Apr-14, 10:07 am)
பார்வை : 241

மேலே