சூளுரை

தலை சுற்றி
அயர்ந்து விழும் பூமியின்
மறுபக்கத்தில்
இருள் வளர்க்கும் சுழல்
பரிகாசம் செய்கிறது
கருவாகி திரளும்
நாவற்ற துயரத்தை

முற்றிலும் என்னில் அளாவி
நேராகி நிற்கும்
நிசப்தத்தின் பிழம்பு
திமிறும் முகாந்திரம்
அருகாமையில்
ஆழமிடுகிறது

கணத்தின் விரல்கள் எரியும்
தனியறையில் வனாந்தர எச்சரிப்பு
உட்புகுந்து சிறகு விரிக்கிறது

உயிர் கசியும் பாடலோடு
புதைந்து கிடக்கும் என் கனவுகளில்
ஊடுருவும் சாத்தானின்
நடை
எச்சம் அழியும்வரை
என்னை தழுவுகிறது

இவ் வகை பொழுதுகளில்
மண்ணின் நினைவில் அதிர்ந்து
குரல் எழுப்பி
குரூர இலக்கை
முத்தமிடும் உதிரம்
வெற்றியின் மிதப்பு .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (1-May-14, 12:48 pm)
பார்வை : 124

மேலே