”காட்டுமிராண்டிகளின் தேசமே

நான் எழுதிய ”ஓர் எழுத்தாளின் கதை ” என்ற தொடர்கதையில் இடம்பெற்ற கவிதை இது.
-------------------------------------------------------------------------


வெடித்து சிதறியது
வெடிகுண்டு...!
வெடித்துப்போனது
இந்து-முஸ்லீம் ஒற்றுமை...!

எவன் வைத்தானோ
எதற்கு வைத்தானோ
வைத்தவனுக்கு என்ன பைத்தியமோ?
அவன் இந்த மதமா ?
அது தேவையில்லை
அவன் மனிதனுமில்லை..!

அரசாங்கமே !
அதிகாரம் கொடு..!
என் கவிதைக்கும்
எனக்கும் ஓர்
அதிகாரம் கொடு..!

ஒரே போடு
ஒரே வெட்டு
வீழ்த்திவிடுகிறேன்
என் வீரவார்த்தைகளிலும்
என் வீரவாளிலும்..!

வருவது யுத்தமா ?
வழிவது ரத்தமா?
நானும் பார்த்துவிடுகிறேன்.
ரத்தத்தின் நிறம் சொல்லுமா?
இது இந்து என்று
இது முஸ்ஸீம் என்று .

சொல்லுமா சிவப்பு ரத்தம்..?
இது காவிக்காரனின் ரத்தம் என்றும்
இது பச்சைக்காரனின் ரத்தம் என்றும்
சொல்லுமா சொல்லித்தான்
வெல்லுமா ?
இந்த மண்ணாங்கட்டி மதங்கள்?


தீவிரவாத காட்டேரிகளே..!

மாற்றானை வீழ்த்தி
மதத்தினை வளர்த்திடு
கீதையும் குரானும்
எப்படியடா இப்படி சொல்லும்?


இந்துக்களை அழித்து
இஸ்லாமியம் ஆளட்டும்
குரான் சொல்லியதா ?
முஸ்லிம்களை அழித்து
இந்துமதம் சிறக்கட்டும்
கீதை சொல்லியதா ?
அல்லது
மதப்பன்றி நீ சொல்கிறாயா ?

நெறிப்படுத்த வந்த மதங்களை
வெறிப்பிடித்த மிருகங்கள்
படித்தால் .........
இப்படித்தான்
இப்படித்தான்
குண்டு வெடிக்கும்
வெகுண்டு கொக்கரிக்கும்
மதங்கொண்ட யானைகளாக
மனிதநேயங்களை கொன்று அழிக்கும்.

வேடிக்கை பார்க்க சொல்கிறாயா ?
வாடிக்கையாய் மறக்க சொல்கிறாயா ?

தீ............!
சீறும் வரைதான் தீபம்
சீண்டி விட்டால்..........
தீ பிழம்பாய் வெடிக்கும்
தீவிரவாத்தை எரிக்கும்
தீமையும் கொளுத்தும்
உன்னையும் கொளுத்தும்
பிடிக்கவா தீயினை ? நானும்
படிக்கவா தீ’வீரவாதத்தினை... ?

குத்தும் கத்தி
யார் குத்தினாலும் குத்தும்.
கையில் எடுக்கவா?


இறுதி எச்சரிக்கை எழுதுகிறேன்.
மதவெறிப்பிடித்த நாய்களே !
கலவரங்களை விட்டுவிடு !
எங்களை விட்டுவிடு!
மதங்களை விட்டு ஓடிவிடு!
மனிதர்களை விட்டு ஓடிவிடு!


சட்டமே...! கொஞ்சம் கவனி!
என் மீது ஆத்திரப்படாதே...!
கண்ணை நோக்கி வரும்
பூச்சுக்களை தட்டிவிட்டு கொன்றால்
அதன் பெயர் வன்முறையல்ல...!

நான் தீவரவாதம் பேசவில்லை
நான் பேசியது தற்காப்பு வாதம்..!

மனிதம் காப்போம் !
மனிதர்களை காப்போம் !
மதம் மறப்போம் !
மனிதனாய் வாழ்வோம் !

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (2-May-14, 2:18 pm)
பார்வை : 292

மேலே