தேர்தல் அறிக்கை
வருது வருது தேர்தல் வருது
வாக்குறுதிகள் பவனி வருது
பொய்களெல்லாம் சாயம் பூசி
பொங்கியெழுந்து ஓடி வருது
அறிக்கை என்ற பெயரிலே
அறிவை மயக்கும்பழைய கள்ளே
சந்தை எங்கும் கடை பரப்பி-புதிய
மொந்தையில் புரண்டு வருது
கைவிட்டுப் போன கச்சத்தீவு
கைகட்டி திரும்ப வருது
மறந்து போன மின்சாரம்
மறுபடியும் பிறந்து வருது
வருமான வரிவிலக்கு எல்லாம்
வரிந்து கட்டி திரும்ப வருது
காய்ந்து போன கால்வாய் எல்லாம்
கரைபுரண்டு திரும்பி வருது
நாட்டில் ஓடும் நதிகள் எல்லாம்
வீட்டினுள்ளே இணைந்து வருது
கேட்டும் கிடைக்கா காவிரி
கேட்காமலே பொங்கி வருது
விலைபோகா பொருட்கள் எல்லாம்
"விலையில்லா" பெயரில் வருது
கதியற்ற மக்களுக்கோ
விதி என்ற பெயரில் வருது
வருது வருது தேர்தல் வருது
வாக்குறுதிகள் பவனி வருது
பொய்களெல்லாம் சாயம் பூசி
பொங்கியெழுந்து ஓடி வருது.