கோட்டைக்கு அழைப்பு

கட்சி ஒன்று தொடங்குகின்றேன்
ஆள்சேர்ப்பு நடக்குது
அன்பர்களே வாருங்கள்!
உறுப்பினர் கட்டணம்
நூறு ரூபாய் மட்டுமே.
முதலில் சேர்பவர்களுக்கு
சலுகைகள் பலப்பல.
பிறகட்சி நண்பர்களுக்கு
முன்னுரிமை நிச்சயம்.
தலைவர் பதவி எனக்கு
மற்ற பதவியெல்லாம்
ஏலத்தில் எடுத்திட
ஓடோடி வாருங்கள்.
கட்சிக்குப் புரியாத
புதுமையான பெயர்
சொல்லும் நண்பர்
கொளகை பரப்புச்
செயலாளர் ஆவார்.
வானவில்லின் நிறங்கள்
கட்சிக் கொடி கொண்டிருக்கும்.
நல்ல சின்னம் தேர்வு செய்ய
போட்டி ஒன்று உண்டு
தேர்வாகும் சின்னம் தரும்
அன்பர்க்கு பரிசு
தேடிவரும் பத்து இலட்சம்
அவர் வீடு தேடி.
எங்கும் நிறைந்த பொருள்
எல்லோரும் அறிந்த பொருள்
வாக்குச் சாவடியிலும்
காணும் பொருளாய்க்
கண்டறிந்து சொல்பவர்க்குக்
கிடைத்திடும் பரிசுத் தொகை.
வாருங்கள் வாருங்கள்
இரண்டாண்டே உள்ளது.
சட்டமன்ற தேர்தல் வர;
சாதனை படைத்து
கோட்டைக்குப் போகும்
கனவை நனவாக்க
கைகூப்பி அழைக்கிறேன்!
வாருங்கள் தோழர்களே
நாளை நமதே என்று
சிந்து பாட வாருங்கள்.
கோட்டையிலே வீற்றிருந்து
நாட்டை ஆள வாருங்கள்.