பேசாத பிரியம்
வாழ்க்கையில சில விஷயங்கள் அப்படித்தான்!
சில பேர காரணமே இல்லாம பிடிச்சு போகும்.அவர்கள் என்ன செய்தாலும் ரசிக்க தோணும்.இந்த மாதிரி ஆதி அந்தமற்ற அன்புக்கு கட்டுப்பாடு, ஒரு வரையறை இவையெல்லாம் கிடையாது.அது இறுதிவரை சொல்லப்படாமலும் போகலாம்.
ஆனால் என்றும் மறையாத பிரியத்தை பெறுவதற்கு நம்மில் எத்தனை பேர்க்கு வாய்த்திருக்கிறது...
உமா நடந்து வருகையில் விளக்குகள் துளிர் விட துவங்கி இருந்தது.
கண்களில் மின்னி எதிர்பட்டது மாநகரின் ஒரு பெரும் ரெஸ்டாரண்ட். அதைச் சுற்றிலும் கண்ணாடி சுவரில் நீர் வழிந்து மெல்லமாக மங்கிக்கொண்டிருந்தது மாலையெனும் பொழுது.
உள்ளே சீரான இடைவெளியில் கைகளில் கோப்பையுடன் இன்றைய நவீனத்தின் முகங்கள் ஜோடியாக அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கடந்து சென்றாள்.
அவளுக்கு அது ஒன்றும் பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்திவிடவில்லை.அது எப்போதும் போல வழக்கமான காட்சி தான்.
சட்டென ஏனோ தானாக சிரித்துக்கொண்டாள்.
அதன் பின்னூட்டங்களில் ஒளிந்திருப்பவன் கதிர்.
ஆமாம் உமாவுக்கு கதிர் மேல் பெயரிடா பிடித்தம் இருந்தது. ஏன் என்றால் தெரியாது. அது அப்படித்தான் காரணமெல்லாம் என்னால சொல்லமுடியாது என்பாள்.
சொல்லப்படாத பிரியங்களுக்கு காரணங்கள் எப்போதும் கேட்கப்படுவதில்லை.
ஆறு மாதத்திற்கு முன் தான் கதிர் உமா வேலை செய்யும் அலுவலகத்தில் சேர்ந்தான்.அது என்னவோ பார்த்ததும் ஈர்க்கப்பட்ட காந்த சில்லுகளைப் போல உணர்ந்தாள் உமா.அவனுடைய நடை! அது ஒரு தனிவித தொனியாய் மற்றவர்களிலிருந்து மாறுபட்டதாய் இருக்கும்.சிரிக்கும் போது கன்னங்கள் வீங்கி கண்கள் சற்று சிறிதாய் உள்சென்றதுபோலிருக்கும்.
தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியன் என்பதைத் தாண்டியும் ஒரு மீளா இரவின் துளி வெளிச்சமாய் படிந்திருந்தது உமாவிற்கு கதிரின் மீதான எண்ணக் கீற்றுக்கள்.
கதிரிடம் உமா அதிகம் பரிமாறிக்கொண்டது காலைப் பனி போன்ற சில வெண்புன்னகையும்,ஒரு சில முறை மதிய உணவின் வேளையில் தான் கொண்டு வந்த சாம்பாரும் கீரையும் மட்டுமே.என்னென்னவோ பேச நினைப்பாள் இறுதியில் மாலையில் பூக்கும் புன்னகையோடு விடைபெற்றுக்கொள்வாள்.
பின்னொரு நாளில் கதிர் உமாவின் கைகளில் தனது திருமண பத்திரிக்கையை கொடுத்து நீங்க கண்டிப்பா வரணும் என்று சொன்னபோது, ஒரு சிறிய புன்முறுவலுடன் வாங்கிக் கொண்டாள்.இது அவள் சற்றும் எதிர்பாராத ஒன்று தான்.
தொலைவிலிருந்தே பார்க்கப்பட்ட பிரியங்கள் என்றும் அரங்கேற்றங்கள் காண்பதில்லை.
அன்று மாலை அலுவலகத்தில் இருந்த அனைவரும் (உமாவுற்பட) கதிரின் திருமணத்திற்கு சென்றனர்.புன்னகையுடன் அனைவராலும் வரவேற்கபட்டாள்.
மண்டபமெங்கும் சிரிப்பொலியும், சிறுவர்கள் ஓடிப் பிடித்து விளையாடியும் இருந்தனர்.
அங்கேயும் சில இளங்காதல்களின் விழி ஜாலங்களை காணமுடிந்தது.
அவளிடம் சொல்லப்படாத பதில்களுக்கு கேள்விகள் எதற்கு?
தன்னுடன் வந்த அனைவரும் சென்று மேடையில் புகைப்படங்களால் தாங்கள் தேக்கி வைத்திருந்த வாழ்த்துக்களையும் பரிசு என்றால் ஏதேனும் ஒரு பொருள் என அவரவர் கொணர்ந்ததை மணமக்களுக்கு அளித்து மெல்லிய புன்னகையை வராமல் வரவழைத்து கொண்டது செயற்கையாய் பதிந்து நிழலாடியது உமாவின் கண்களுக்கு.
சிறிது நேரம் இருந்து விட்டு பின் மேடையேறி கதிரின் கைகளைப் பற்றி வாழ்த்துக்கள் கூறிவிட்டு புகைப்படத்திற்கு நிற்க விருப்பமில்லையென்றபோதும், கதிருடன் சேர்ந்து எடுக்கும் போட்டோ என்பதால் நின்று சிரித்துக் கொண்டாள்.
மண்டபத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது உமாவிற்கு பெரிதான வருத்தம் ஒன்றும் இல்லை.என்றபோதிலும் கதிரை அவள் நினைக்காமல் இருக்கப்போவதில்லை ஒருபோதும்.
சிலரின் மனம் அப்படித்தான்,
காரணமற்ற பிரியங்களின் நினைவுகளை எப்போதும் சுமந்துகொண்டே இருக்கும்.
யாரிடமும் பகிரப்படாத சந்தோசங்களின் தொலைந்து போன நதியை தேடுவது போல...