பாலு கடை

வழக்கத்திற்கு மாறாக செட்டியார் திறந்த கடை.

ஆம், அது ஒரு மளிகை கடை.

கடந்த நான்கு வருடமாக
கடையை பாலு தான் திறப்பான்,
அவன் தான் சாற்றுவான்,
கடை சாவி பாலுவிடம் தான் இருக்கும்.
அவ்வளவு நம்பிக்கை செட்டியாருக்கு.

பாலு கடைக்கு ஐந்தாம் வகுப்பு பெயில் ஆனதும்,
அவன் அப்பா செட்டியாரிடம் விட்டவர் தான்.

அதற்கு பிறகு, அவன் அப்பா அவன ஒரு வார்த்த கேட்டதில்ல,
செட்டியாரிடம் வேலை செய்யறான் எப்படியும்,
செட்டியார் மாதிரியே வந்துருவான் என்ற கனத்த நம்பிக்கை அவன் அப்பாவிற்கு.

பாலுவிற்கு கடை அத்துபடி,
கண்களை மூடியபடி பொருட்களை எடுக்கிற அளவிற்கு.

பத்து வயசில் கடைக்கு வந்த பாலுவிற்கு,
சித்திரை வந்தால் வயது இருபத்தி நான்கு.

அந்த கடைக்கு வாடிக்கையாளர்களுக்கும் பாலுவிடம் ஜாமான்,
வாங்கினால் தான் நிறைவாக இருக்கும்,
விலையும் கொஞ்சம் குறையும்.

சில்லறை வாடிக்கையாளர்களுக்கு மத்த கடையை விட ஒரு ரூபாயாவது குறைவாகவே இருக்கும்.
இருந்தும் அவ்வளவு லாபம் செட்டியார் கடையில்.
அதான்,பாலுவின் வியாபார தந்திரம்.

அந்த கடையை செட்டியார் கடை என்று சொல்வதை
விட பாலு கடை என்று சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும்.
பொருத்தமாகவும் இருக்கும்.

இப்படி இருக்க,
பாலு கடைக்கு வரலனா எப்படி நடக்கும் வியாபாரம்.?

அடுத்த நாளும் பாலு வரவில்லை.
ஒரு தகவலும் இல்லை.

தினமும் வண்டியில் செல்லும் பாலுவிற்கு விபத்து எதாவது ஆகிவிட்டதா என்ற அச்சம் வேறு செட்டியாருக்கு.

வழக்கமாக பாலு ஊரிலிருந்து ஜாமான் வாங்குபவரிடம் பாலுவை பற்றி விசாரித்தார் செட்டியார்.

நேற்று சாயங்காலம் கூட்ரோடில்,
அவனும் அவன் அப்பாவும் இருப்பதை பார்த்தேன் என்றார்.

செட்டிக்கு ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும்,
ஒரு பக்கம் சந்தோசம்.

ஆம்,பாலுவிற்கு ஒன்றும் ஆக வில்லை என்ற சந்தோசம் தான் அது.

மறுநாள், செவ்வாய்.
பல சரக்கு கடைகளுக்கு அன்று தான் விடுமுறை.

பாலு வராத காரணமும் தெரிய வரல,
இனி வரமாட்டானும் தெரில,
விடவும் மனசு இல்ல,
எப்படியாவது கடைக்கு மறுபடியும் கூட்டி வரும் நோக்கம் மட்டுமே செட்டிக்கு.

எதுக்கும்,
சம்பள பாக்கியையும், கையில் மூன்று இலட்சம் ரொக்கத்தையும்,
எடுத்து சென்ற பாலுவின் ஊருக்கு சென்ற செட்டி.

வீடு பூட்டி இருக்க,
பக்கத்துக்கு வீட்டில் விசாரித்தார் செட்டி.

அத யான் கேகுரிங்க..?
பாலுக்கு வெளிநாட்ல வேல கடச்சிருக்கு,
இருந்தும் அவன் போகமாட்டனு ஒரே அடம்,
ரெண்டு நாளா சாப்டகுடும் இல்ல.
அப்பரும்,
அவன் அப்பா ஏதேதோ சொல்லி சமாதனம் படுத்தி,
இப்ப தான் கெலம்பனாங்க..

செட்டிக்கு கண் கலங்கியது.
உடனே வண்டியை திருப்பிய செட்டி,
விட்டார் இரயில் நிலையத்திற்கு.

அங்கு,
பாலுவை சமாதானம் படுத்தி கொண்டிருந்தார் அவன் அப்பா.

செட்டியை பார்த்த பாலு,
ஓடிப்போய் கட்டி பிடித்து அழுதான்.

செட்டி முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.

அவன் அப்பா,
இங்க வா பாலு இரயிலுக்கு நேரமாச்சு என்று சொல்ல,
வரமாட்டேன் என்ற பிடிவாதத்துடன் பாலு.

இரயில் புறப்பட தொடங்கியது.
பின்,
ஒரு வழியாக,
பாலுவை அந்த இரயிலில் எப்படியோ சமாதானப் படுத்தி ஏற்றினார் அந்த செட்டி.

அந்த அப்பா நா அவ்வளோ சொல்லியும் கேக்கல என்றார்.

செட்டி எடுத்து வந்த சம்பள பாக்கியையும், கையில் இருந்த மூன்று இலட்சம் ரொக்கத்தையும்
அவன் அப்பாவிடம் கொடுத்து கண்ணீர் மல்க திரும்பி சென்றார்.

________________________________
ஆக்கம்
- ரேணுமோகன்

எழுதியவர் : ரேணுமோகன் (15-May-14, 10:53 pm)
சேர்த்தது : ரேணுமோகன்
Tanglish : BALU kadai
பார்வை : 258

மேலே