சுதந்திர தும்பிகள்

தும்பிகள் பறக்கின்றன
சுதந்திரமாய் ......
வால் பிடித்து விளையாட
சிறுசுகளுக்கு பிடித்தளிக்கும்
அவனது விரல்கள் இல்லாமல்......!!

பொன்வண்டுகள் பூரிப்புடன்
திரிகின்றன....
நூல்கட்டி இழுத்து ,
மழலை மந்தைகளுக்கு
தீப்பெட்டிக்குள் போடுமவன்
விரல்கள் இல்லாமல்.....!!!

வண்ணப்பட்டம் பறக்க முடியாமல்
தவிப்புடன் தவிக்கும்
அவனது 'தம்பி'களுக்காய் .....
நீண்ட வால்கட்டி
நூலைச் சிம்பி விடுமவன்
விரல்கள் இல்லாமல்....!!!

சுட்டு வைத்த முறுக்குகளின்
போர்வையாய் எறும்புகள்..
தின்று தீர்த்து மீண்டும் மீண்டு
கேட்டு
ஆத்தாவை ரசிக்க வைக்கும் அவனில்லாமல்....!!

வீதியின் வீடுகளின் கண்ணாடிகள்
உடைய முடியாமல் உவகையுடன்-
அவனது பந்தடிக்கும் மட்டைகள்
விதவைகளாய் மூலைகளில் அவனில்லாமல்...!!

துரத்தி துரத்தி
நீர் பீச்சியடித்தி விளையாடும்
அவனது தங்கைகள்
மெளன மேடுகளில் அவனில்லாமல்...!!!

எங்கு நோக்கினும்
அவனுக்கான ஏக்க விழிகளை
வீசி விசிறியடித்து
விசில் அடிப்பதை மறந்த
அவனது
சேக்காலிகள் சோகமாய்
அவனில்லாமல்.... !!

"லே , சின்னவனே
வந்திட்டியாம்லே..
வா..வா...
வரகு அடை கருப்பட்டித்தூள் சாப்பிடுலே..
லே சின்னவனே..வந்திட்டியாம்லே..""
.....மூன்று மாதமாய் முனகலை
மூச்சாக்கி கிடக்கும்
அவன் அப்பாத்தா மட்டும்
நம்பிக்கை நாழிகைகளுக்குள்..!!!!.


எப்படி சொல்வேன்
எல்லோரிடமும் .....
புகைவண்டி வெடிவிபத்தில்
தேடப்படும் 'சந்தேக ' குற்றவாளிகளுள்
அவனும் ஒருவன் என்று...

எழுதியவர் : அகன் (21-May-14, 8:26 pm)
பார்வை : 91

மேலே