பிச்சைப் பாத்திரம் Mano Red

அனைத்தும் அறிந்த
ஆண்டவனைக் கேளுங்கள்,
அனாதை குழந்தைக்கு
ஆகாரம் இல்லாத போது
அவனுக்கு மட்டும்
அலங்காரம் அவசியமா...??
குழந்தையும் தெய்வமும்
ஒன்று தான் என்பவர்களுக்கு
ஒன்று மட்டும் புரிவதில்லை,
கல்லாக இருப்பது வேறு
கருவில் பிறப்பது வேறு..!!
கோவில் மணி ஓசைகள்
குழந்தைகளின் பசி அழுகையை
விழுங்கி விடுகின்றன,
இறைவன் காதுகள்
மந்திரங்கள் கேட்க மட்டுமே
படைக்கப்பட்டது போல...?
இரக்கம் கொஞ்சம் இருந்தால் தானே
இறைவனும் இறங்கி வருவான்,
கலிகாலம் என்ற
காரணம் காட்டியே வராமல்
காதில் பூ சுற்றுகிறான்..!!
வாடிய மலரில் விசம் தெளித்து
வெயிலில் எறிவது போல,
பசிக்கும் போது
பரிதவிக்கும் குழந்தைகள்...!!
கண்ணீர் கூட கானல் நீராக
காய்ந்து விட்ட சோகம்..!!
பசிக்க விடாமல்
சிரிக்க வைப்பதற்கு,
பிச்சைப் பாத்திரம் எல்லாம்
அட்சய பாத்திரமாக மாற
வரம் தரப் போகும்
வள்ளல் யாரோ...??
ஏன் எதற்கு
என்று தெரியாமலே,
காத்திருந்து
கடவுளைக் காண்பதை விட,
கரம் நீட்டி காப்பாற்ற
கருணை இருந்தால் போதும்
கடவுளும் கை தட்டுவான் ..!!