வாழ்வியல்

மனிதரை வாட்டும்
மகத்துவம் கொண்டவை
தோல்வியும் பிணியும்
முதுமையும் மரணமும்.

இவை தரும் வலியும்
பயமும் நோவும்
எவரும் தப்பார் -
இதுவும் விதியே.

பெற்றோர்வழியே
பெறுவது சில பிணி.
வாழும் வகையில்
வருவது சில பிணி.

பெற்றோர் வழியில்
பெறுகின்ற பிணியை
முற்றாய் விலக்கல்
முடியாததுவே.

வாழும் வகையில்
வருகின்ற பிணியை
ஓரளவுக்கு
விலக்குதல் சாத்தியம்.

உடற்பயிற்சியும்
உயரிய பழக்கமும்
உண்பொருள் தேர்வும்
உறக்கத்தில் ஒழுங்கும்

பிணியை விலக்கிட
பெரிதும் உதவும்.
சிந்தையில் செறிவும்
சேர்ந்திடின் சிறப்பே.

முதுமையும் மரணமும்
இயல்பாய் ஏற்கணும்.
இரண்டையும் தவிர்க்கும்
இச்சையே துன்பம்.

புலன்வழி இன்பம்
போற்றும் எவரும்
முதுமைப் பற்றி
முயங்கித் தவிப்பார்.

இன்பந் திளைப்பதை
இயல்பாய் துறப்போர்
முதுமையில் இயல்பாய்
காலங் கழிப்பார்.

உடலே நானென
உள்ளுவோரெல்லாம்
இறப்பையெண்ணி
இன்னல் படுகிறார்.

வாழும்போதே
விடுதலை விலக்கலை
வழியாய்க் கொள்வோர்
இறப்புக் கஞ்சார்.

இறப்பு என்பது
இயக்கத்தின் நிறுத்தம் - இதை
இயல்பாய் ஏற்போர்
இருப்பார் மகிழ்வாய்.

இச்சை வழியில்
இயங்குமெவரும்
இச்சை மறுப்பைத்
தோல்வி என்கிறார்.

விரும்பும் விளைவை
தருகின்ற வினையை
எப்பொழுதுஞ் செயல்
எவரால் இயலும்?

சுயமுயற்சியும்
சூழலும்
பிறர் பங்களிப்பும்
விளைவை விளைக்க

வெற்றியும் தோல்வியும்
தஞ்செயல் விளைவாய்
தவறா யெண்ணுதல்
தவிர்த்தல் நலமே.

முனைப்புடன் கூடி
முயற்சிகள் செய்வீர்.
முடிவெதுவாயினும்
இயல்பாய் ஏற்பீர்.

பிரிவோ பிணியோ
முதுமையோ மரணமோ
எவரும் ஒருநாள்
எதிர்கொள்ள வேண்டும்.

நேற்றை வருத்தம்
நாளைப் பயங்கள்
இன்றை மகிழ்ச்சியை
இழந்திடச் செய்யும்.

இக்கண நிகழ்வில்
அக்கறை காட்டி
முறையாய் செய்வீர்
முனைப்புடன் செயலை.

தன்னிலை புரிந்து
தெளிவுடன் வாழ
இருக்கும் வரையிலும்
இருப்போம் மகிழ்வாய்.

வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (6-Jun-14, 6:30 pm)
சேர்த்தது : L Swaminathan
Tanglish : vaazviyal
பார்வை : 75

மேலே