இராப்பிரளயம்

நெடுங்கதை பேசி
விடியாத ராவுகளின்
தூக்கப் பொதிசுமந்து -
இரவேற முடியாமல்
துடிக்கும் இமைக்கழுதை
விழுந்து கிடக்கும்
பகலின் பொழுதுகளில் !
பிரக்ஞைகள் ஏதுமற்ற
பிறிதொரு ராவில்
தீராக் கதைகள்
தொடர்ந்து நீளும் -
பண்டையக் கிழவியின்
கதை மடிதேடி
சூரக் கனவுகள்
சொப்பனப் பலியிடும் !
எரிகொண்ட விறகினில்
நீர்த்தாரை பட்டது போல்
குளிர்புகை வீசிக்
கொப்பளிக்கும் சாமங்களில்
தீப்பண்டம் விரும்பிய
கண்கள் கனல் உண்ணும் !
இரவு நாகத்தின்
நிசப்த விஷத்தில்
கசமாகிப்போன சாமங்களெங்கும்
தவளைக் கதறலாய் -
யாருக்காகவோ யாருடனோ
தொடராக் கதைகள்
தொடர்ந்து நிகழும் .