நிறங்களின் பாக்கள் ~~ ✿ சந்தோஷ் ✿
நிறங்களின் பாக்கள்
--------------------------------
கனவுச்சோலையில்
கவிதைநடையில்
நான் நடந்தபோது- அந்த
அதிசயம் நடந்தது.
என் கண் முன்
பலவண்ணத்தில் சில
அழகான தேவதைகள்.
“ யார் நீங்கள் ? “ என்றேன்
”உன் வாழ்வை
வண்ணமயமாக்கும் நிறங்கள் ”
என்றார்கள் நிறத்தேவதைகள்.
”அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன் ”
என்றேன்..
அணிவகுத்து நின்று
புதுக்கவிதை வாசித்தார்கள்.
--------------------------
சமாதானப்புறா மேனியில்
ஊறிய வண்ணம்.
வெகுளித்தனத்தில் குளித்த
தூய்மை எண்ணங்கொண்ட
தும்பை வண்ணம்.
வானதேவதையின் உடல்
உரசும் வெண்மேகம்.
கருமேகம் சிந்தும்
மழைத்துளியின் நிறம்.
கவிஞனே !
உன்னைப்போல
கள்ளமில்லா மனங்களில்
ஊடுருவும் நன்னிறம்
என் பெயர் "வெள்ளை".
--------------------------
உன்னவள்
இமைப்புருவத்தில்
கண்மையழகு.-
பெண் மகள்
விழியில் உருளும்
முழியழகு.
ஆண் மகன்
தேகத்தில் திரளும்
கருப்பழகு.
தமிழ்நாட்டு
திடீர் மின்தடையில்
இளஞ்ஜோடிகள்
இருட்டுநிற நேரத்தில்
திருட்டு முத்தமிட்டால்
நான் சில்மிஷ அழகு.
நீ பாடச்சாலையில்
பாடம் படித்த
கரும்பலகையின்
நிறமானவள்
ஒளிர்சிவப்போடு இணைந்து
உதயசூரியனை ஆட்சியில்
அமர்த்தியவள்.
பெரியாரின்
சட்டைக்குள்புகுந்து
மூடநம்பிகைகளை
ஒழிப்பவள்..
போராட்ட கொடிகாட்டி
எதிர்ப்பு காட்டிடவும் -என்
நிறமுடைய உடையுடுத்தி
எடுப்பாய் காட்டிடவும்
தேவையானவள்.
நான் "கறுப்பு".
--------------------------
கண்ணகி எரித்த
மதுரை தீயில்
அழல்நிறம்
உயிர்வாழ மானிட
உடலில் ஓடும்
குருதிநிறம்
மங்கை நெற்றியில்
மங்களம் பாடும்
குங்கும நிறம்
பூத்துக்குலுங்கும்
ரோஜா இதழில்
செப்புநிறம்
சிரித்து மயக்கும்
கன்னியர் இதழில்
செம்பவளநிறம்.
இதம் தரும்
காதல் உணர்வை
தூண்டுபவள்..!
முத்தம் தரும்
உன்னவள் இதழில்
குடிக்கொண்டவள்..
அபாயகுறிக்கும் நானே
சாலைபாதுகாப்பும் நானே
வலிமைக்கும் நானே
வறுமைக்கும் நானே
என் பெயர் "சிவப்பு.".!
_______________________________
ஆழ்சிவப்பு கருவில்
ஆழிநிற மரபில்
கலந்து பிறந்தேன்.
பன்னிரண்டு ஆண்டுக்கு
ஒருமுறை பிரசவிக்கும்
குறிஞ்சிப்பூ வண்ணம்.
வானவில் படைப்புகளில்
கடைநிலையில்
கவிதை எழுதும்
ஆழ் செந்நீலம்.
என் பெயர் ”ஊதா.”
_______________________________
வயல்வெளிகளில்
விரவிக்கிடக்கும
பசுமை.
மயில்தோகையில்
மயங்கிக்கிடக்கும்
பதுமை.
ரயிலுக்கு காட்டும்
கொடியில் இருக்கும்
பெருமை.
வானவில்லில்
நடுவில் இருக்கும்
நடுநிலையாளர்.
மருத்துவமனைகளில்
நிற சிகிச்சை கொடுக்கும்
வைத்தியன் போன்றவள்
இயற்கை வளங்களில்
நிற குறள்பா எழுதும்
வள்ளுவர் போன்றவள்.
என் பெயர் "பச்சை"..!
_______________________________
என் நீலநதியின்
மேலாடையை திருடி
போர்த்திக்கொண்டது
அந்த நீலவானம்.
நீலக்கடலுக்கு
நிறக்காரணம்
என் அலைநீளம்.
நீ கவியெழுத
சிந்தனைத் தூண்டும்
என் ஆழ்ந்த வண்ணம்
எனக்கு ”நீலம்”
என்று பெயர்.
_______________________________
கருஞ்சிவப்பில் ஊறிய
இளமஞ்சள் எடுத்து
தேய்த்து குளித்த
கதகதப்பு ராணி நான்.
இந்திய தேசக்கொடியில்
என் வண்ணத்திற்கு
கம்பீர இடமுண்டு.
வானத்து நீர்த்துளிகள்
ஆதவனுடனான கூடலில்
பூக்கும் வானவில்லில்
எனக்கொரு இடமுண்டு.
நான்
வளமைக்கான குறீயீடு.
"ஆரஞ்சு "என்பது
என் பெயர்.
_______________________________
சூரியக்கிழவி
ஆகாய அம்மியில்
அரைத்துவைத்த
சாயுங்காலத்து
நிலா வண்ணம்.!
உன்னவளை நீ
தாரமாக்கி
ஆதாரமாகி தொங்கும்
தங்கத்தாலி நிறம்!
இரவுமாதவியிடம்
தொலைந்துப்போன
சூரியக்காதலனை நினைத்து
வேதனையில் தலைகவிழும்
சூரியக்காந்தி பொன்னிறம்!
தங்கத்தில் வாழும்
அற்புத வண்ணம் -பெண்
அங்கத்தில் பூசும்
தெய்வீக வண்ணம்.
என் பெயர் "மஞ்சள்"...!!
_______________________________
அறிமுகம் முடிந்தாயிற்று…!
"ஆஹா ..! தேவதைகளே..!!
அற்புதம் அற்புதம் "என்றேன்.
“டேய் எழுந்திருடா
யாருடா அந்த தேவதைகள்”
எனைப்பெற்ற தேவதை
என் அன்னை
தட்டி எழுப்பினாள் என்னை.
_______________________________
-இரா.சந்தோஷ் குமார்.
பி.கு : இந்த படைப்பு எழுத உற்சாக தூண்டுதல் அளித்தவர் என் அருமை தங்கை நித்யா(மகிழினி).