வேண்டும் ஒரு நாள்

எனக்கு
விருப்பமானவர்களிடம் இருந்து,
என்னை வெட்டிக் கொண்டு,
வெகு தூரம் - சென்றிருக்க
வேண்டும் ஒரு நாள்!

என்னை
விரும்புபவர்களிடமிருந்து,
விடைபெற்று விறைப்பாய் - திரிய
வேண்டும் ஒரு நாள்!

என் விருப்பங்களை,
அறுத்தெரிந்து அகோரியாய்,
அங்கும் இங்கும் - அலைந்திருக்க
வேண்டும் ஒரு நாள்!

என் வெறுப்புகளை,
கடவாயில் அடக்கி,
அசைபோட்டு,
விழுங்கியபடி - சீறிப்பாய
வேண்டும் ஒரு நாள்!

பெற்ற
சுங்கங்களின்
சுவடழித்து,
சடலமாய் - சஞ்சரிக்க
வேண்டும் ஒரு நாள்!

ரணமான
வலிகளிருந்து,
விடுப்பு - பெற்றவனாயிருக்க
வேண்டும் ஒரு நாள்!

சாதித்த சாதனைகளுக்கு,
சமாதி கட்டி,
சாமானியனாய் - ஜனித்திருக்க
வேண்டும் ஒரு நாள்!

குழப்பங்களின் குரல்வளையை,
நெறித்துடைத்து,
தெள்ளத் தெளிந்தவனாய் - திகழ்திருக்க,
வேண்டும் ஒரு நாள்!

கற்ற கல்வியால்,
வீங்கிப்போன மூலையில்,
துவாரமிட்டு,
துடிப்பிழந்த கடிகாரமாய் - இருக்க
வேண்டும் ஒரு நாள்!

கேட்டு வளர்ந்த ஞானத்தை,
பிணமாக்கி விட்டு,
ஞான சூனியமாய் - அவதரித்திருக்க
வேண்டும் ஒரு நாள்!

சதா சமூக
அவலங்களின் சிந்தனையை - தவிர்த்திருக்க
வேண்டும் ஒரு நாள்!

வெள்ளந்தி
முகமூடி அணியாத - முகம்
வேண்டும் ஒரு நாள்!

அழுக்கில்லா சட்டையும்,
அழுகிப்போன மனக்குட்டையும்,
அணியாமல் - இருக்க
வேண்டும் ஒரு நாள்!

தமிழ் மறந்து போக வேண்டும்.
பிறர் பேசும் தமிழின் சத்தம்,
அந்நிய பாஷையாய்,
என் காதில் வந்து - விழ
வேண்டும் ஒரு நாள்!

மொத்தத்தில்,
என்னையே மறந்து,
இலக்கில்லா இறகுகள் அணிந்து,
ஒரு பட்ச்சியைப்போல்,
காற்றடிக்கும் திசையில்,
வானத்தில் முழு சுதந்திரத்தோடு,
சுய கட்டுப்பாடுமின்றி,
பறந்து திரிந்து - பரவசமடைய
வேண்டும் ஒரு நாள்!

எழுதியவர் : கணேஷ்குமார் பாலு (12-Jun-14, 12:32 am)
பார்வை : 122

மேலே