நவின்றிட முயல்கிறேன் நச்சென நற்கவிதைகள்
வெண்பா வடித்திடவே நன்பாவும ளித்திடவே
என்மனம் விழையினும் பிழையிலா தமிழில்
வரிகளை வடித்திட நெஞ்சமது அஞ்சுகிறதே
முயன்றால் வருமென மூளையும் செப்புகிறது !
உரைநடை கவிகளும் உலவிடும் உலகிலே
வசனமாய் வரிகளும் வழிந்திடும் தளத்திலே
குறும்பா அரும்புகள் குவிகிறது அகிலத்தில்
வெத்துப்பா எனதெலாம் வெண்பா ஆகிடுமோ !
துடித்திடும் உள்ளத்தில் துளிப்பா தோன்றலும்
இடியென இதயத்தில் தாக்கிடும் எண்ணமும்
வடித்திடும் வரிகளோ வகையாய் வந்தாலும்
தரவரிசை யிலில்லை எனபதை அறிவேன் !
நற்றமிழ் அன்னையிடம் பற்றும் கொண்டதால்
நவின்றிட முயல்கிறேன் நற்கவிதைகள் நானும்
அடித்தளத்தில் நிற்கிறேன் ஆண்டுகள் ஆனாலும்
அனுபவப் பள்ளியிலே ஆரம்ப வகுப்புதான் நான் !
எப்பொருளில் எக்கவிதையும் எழுதுகிறேன் நான்
கருப்பொருள் கலையாமல் கருத்தும் சிதறாமலே
மெய்பொருள் மேனியும் மேன்மையுடன் மிளிர
பணிவுடன் படைப்பதை படிக்கின்றீர் நீங்களும் !
வாசமிகு நந்தவனத்தின் வாஞ்சைமிகு நட்புகளே
பாசமிகு தோட்டத்தின் பண்புள்ள அன்பர்களே
நேசக்கரம் நீட்டிடும் நெஞ்சார்ந்த உறவுகளே
நவில்கிறேன் நன்றியை தொடர்கிறேன் நானும் !
பழனி குமார்
17.06.2014