ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
வண்ணம் மாறவில்லை
தீயிலிட்டபோதும்
வெண்சங்கு !
ஒளி தந்தது
உருகியபோதும்
மெழுகு !
வாசம் தந்தது
தேய்ந்தபோதும்
சந்தனம் !
சீட்டு எடுத்தது
சிறையிட்டபோதும்
சோதிடக்கிளி !
இறந்த கன்று
முன் வைத்தபோதும்
பால் தரும் பசு !
அக்கரை சேர்த்தது
தண்ணீரில் மிதந்தபோதும்
படகு !
மதுவிற்ற தனியாரிடம் கல்வி
கல்வி கற்பித்த அரசிடம் மது
துன்பத்தில் மக்கள் !
எட்டாக் கனியானது
ஏழைகளுக்கு
உயர்கல்வி !
உண்ணும் உணவு
கேள்விக்குறியானது
உலகமயம் !
வழக்கொழிந்தன
கதக்களியும்
கம்பங்களியும் !
பயன்படுத்தாததால்
ஏர்கலப்பையில்
கரையான்கள் !
தாகமும் தணிக்கும்
உயிரையும் எடுக்கும்
தண்ணீர் !
.
இயற்கையன்று செயற்கையென்று
மின்வாரியம் அறிவிப்பு
மகரஜோதி !
கடந்தகாலம் மற
எதிர்காலம் நினை
நிகழ்காலம் வாழ் !