குழந்தைகள் தினம்

நேரு பெருமானே!
குழந்தைகள் தினம்
கொண்டாட வேண்டும்

கூப்பிடுங்கள்
குழந்தைகளை

அங்கங்கே தேசமெங்கும்
இரும்படிக்கும் ரோஜாக்களை

தாய்ப்பாலுக்கு சம்பளம் கட்டச்
சம்பாதிக்கும் சிசுக்களை

இருக்கிறார்கள்....

சிவகாசியின்
வெடிமருந்து கிடங்குகளில்

காஷ்மிரின்
கம்பளைக் கிடங்குகளில்

மேற்கு வங்கத்தின்
செங்கற் சூளைகளில்

சூரத்தின்
வைரத் தொழிற்சாலைகளில்

டெல்லியின்
சாலையோர டீகடைகளில்

பெரோசாபாதின்
வளையல் கூடங்களில்

அலிகாரின்
பூட்டுத் தொழிற்சாலைகளில்

கூப்பிடுங்கள்
நேருஜி

அந்தக்
கொழுந்துகள் இல்லாமல்
குழந்தைகள் தினம்
கொண்டாடினால்

சட்டையில் நானும்
கட்டாயம் அணிவேன்

ஒரு
கருப்பு ரோஜா!!!

எழுதியவர் : (14-Nov-09, 10:53 am)
பார்வை : 5300

மேலே