கற்கால வாழ்வே பொற்காலம்
விண்ணிலிருந்து பிறக்கவில்லை நாம்
மண்ணிலிருந்தும் முளைக்கவில்லை !
உண்டான கருவும் உருவான பின்னர்
உலகையே காண்கிறோம் மனிதராய் !
உருவங்களும் மாறுது உயிரணுவிலே
பருவங்களும் மாறுது வளர்கையிலே !
எண்ணங்கள் பிறக்குது எத்திசையிலும்
வண்ணங்கள் மாறுது வாழ்க்கையிலே !
உணர்வுகள் கலக்குது உயிரினிலே
உறவுகள் அறியுது உய்க்கையிலே !
திரிந்திடும் சாதிமதங்கள் குதிக்குது
பிரித்திடும் நிலைதான் வலிக்குது !
பதவியும் பணமுமே பரிசம் போடுது
அளவிலா ஆசை அலையாய் மோதுது !
செயற்கை இயற்கையை இங்கு முந்துது
செயல்கள் நிலையின்றி இன்று தவிக்குது !
போலியும் வாழ்விலே போட்டி போடுது
உண்மையோ உலகில் தோற்றுப் போகுது !
ஒரு சாண் வயிறுதான் அனைவருக்கும்
ஒட்டியே இருக்குது பலருக்கு என்றுமே !
அலசிட எண்ணினேன் அயர்ந்திட்டேன்
அகிலமே பயணிக்கும் பாதையை கண்டு !
கற்கால மனிதனின் வாழ்வே பொற்காலம்
தற்கால வாழ்க்கையோ தடுமாறும் காலம் !
பழனி குமார்