கிராமத்து திருமணங்கள்
வெட்கத்தை முகத்தில் மறைத்து
வெளித் தெரியாமல் கண்சுழற்றி
பெற்றவர் முடிவு செய்த துணையோடு
திருமணம் நிச்சயிக்கப்பட்டு போனது
கடைசித் தெருவின் கல்யாணங்கூட
பரபரப்பாய் கடைப் பெஞ்சுகளோடு
ஊருக்கே ஒரு திருவிழாச் செய்தி
வாழப் போறவங்க நல்லாயிருக்கணும்னு..
சேலை எடுப்பது வளையல் கொடுப்பது
மாமன் விருந்து மச்சினன் விருந்தோடு
முற்றங்களில் விரிக்கப்படும் வாழையிலை முதல்
கிண்டல் கேலிகளும் அளவாய் அரங்கேறும்
உயர் கம்பத்தில் ஒலிபெருக்கி கட்டி
டி.எம்.எஸ் பக்தி பாடல்கள் பரவசமாகி
வரிசையாய் வருகை தரும் உறவினர்களோடு
தடாபுடலான சமையல்களோடு திருமணம்
மகராசி இவ நல்லாயிருக்கணும்னு
ஒலிக்ற பல்லி்ல்லா பாட்டிகளின் வாழ்த்தும்
மணமகள் அருகில் ஒட்டி நின்று
தோழிகளின் குறும்புத்தன பார்வைகளும்
பொத்திப் பொத்தி வளர்த்த மகளை
கட்டிக்றவன் பார்த்துப்பானான்னு - தன்னை
அறியாமல் வழியும் தாயின் கண்ணீர்
தந்தையின் புன்னகை கலந்த தடுமாற்றம்
ஊரார் அமர்ந்திருக்க மங்கல நாதத்துடன்
கண நேரத்தில் கட்டப்படும் தாலிகள்
பெற்றோரின் பாதங்களைத் தழுவி
மனதினில் அழுது கொள்ளும் அன்பு
மனசு இடையிடையே நினைக்கும்
உடன் பிறப்புகள் தன்னின வளர்ப்புகள்
விடப்போகும் தான் கோலமிட்ட வாசல்
படித்த அறைகள் பதிந்த சுவடுகள்..
'மணமகளே மருமகளே வா' பாடலின்
வரவேற்போடு இணையும் புது வாழிடம்
தேடுகிறது பயந்த மனங்களுடன் பயணத்தில்
முதலாய் பேசப்போகும் துணையின் முகத்தினை