பகல் கனவு
பகல் கனவு
அதிகாலை வேளை......
குயில் பாடும் நேரம்.......
மெல்லிய குளிர்காற்று......
இமைகளைத் தழுவும்,
இனிய உறக்கத்தில்,
மலர்ந்தது ஓர் பகல்கனவு........
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்,
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்"....
என்றானே நம் பாரதி......
அவன் வாய்மொழி மெய் ஆனதே ,
50 சதவீத இடஒதுக்கீடு
பெற்றனர் பெண்கள்!....
கலங்கமில்லா காவிரி ஆறும்
துள்ளி வந்தது
நம் தமிழகத்திற்கு.......
வரதட்சணை எனும்
உயிர்க் கொல்லி நோயோ
உயிரற்றுப் போனது........
ஈழத் தமிழ் குழந்தை
சிரிப்போடு பிறந்தது - நான்
இனி அடிமையில்லை என்று!.......
அரசியலோ அற்ப்புதமாய்
மாறியது மக்களாட்சியாக........
போதை பயிலும் இடமான
மதுபானக் கடைகளோ,
கல்வி பயிலும் இலவச
பள்ளிக் கூடங்கள்.........
பாலியல் கொடுமைகளோ
பஞ்சாய் பறந்தது......
எட்டுத்திக்கிலும்
சூழ்ந்திருந்த இருட்டோ
கதிரொளி பாய
கருகிப் போனது......
மதமோ! இனமோ!
குலமோ! கோத்திரமோ!
வேற்றுமைஎல்லாம்
வேரறுத்துப் போனது.........
கால் கடுக்க
கணவனுக்காக காத்திருந்து
கண் பூத்துப் போன
காஷ்மீரின் மனைவிகளோ
கண்ணீர் விட்டனர் ஆனந்தமாய்......
@@@@@@@@@@@@@
இன்னும் என்ன தூக்கம் என்று
எழுப்பி விட்டார் என் கணவர்......
"கனவு காணுங்கள்" என்றாரே
நம் அப்துல்கலாம்
பலிக்குமா என்று
கூறவில்லையே!......
பலிக்குமா என் கனவு.......