தமிழர் வாழ்வியலில் அகமும் புறமும்

இது, ஆனந்தக்கும்மி என்னும் பாவகை.
வெண்டளை பிறழாது, ஏழுசீர்களால் அமைவது கும்மி!
____________________________

செம்மொழி யாம்புகழ் செந்தமி ழாலிங்கு
...சிந்தை சிறந்த குழாத்தினிலே
எம்மொழி யாயினு மெம்மொழிக் கீடில்லை
...யென்னு முரத்துடன் பாடவந்தேன்
எம்மிற் பெரியவர்க் கூடு மரங்கினி
...லென்னையுங் கூட்டிய பைந்தமிழே
அம்ம நினதருட் காத்தி டுகநானும்
...நாற்கவி யாலுனை யேற்றிடவே!

ஊரது போற்றுநற் பேறுடை மாந்தரென்
...முன்னின்ற ஐவரின் முன்பணிந்தேன்
வேர்மொழி காத்திட கூடுங் குழாத்தினர்
...நற்றகை முன்பிங்கு நான்பணிந்தேன்
ஓரிடந் தந்தென்னை வுய்விக்க யெண்ணிய
...நாய கனைநான் பணிந்திடுவேன்
கார்முகி லாய்க்கவி மாமழை பெய்திடும்
...பாமுகில் ராசனின் தாள்பணிந்தே!

பார்மிசை தோன்றிய பண்பட்ட செம்மொழி
...யாவினுங் காணாத கூறுதனைக்- கவித்
தாரசை மார்பினட் தண்டமி ழாளெங்கள்
...தாயவட் கொண்டதைப் பாடவந்தேன்
நாரியர் மேல்கொண்ட காதலை யுமந்தக்
...காதலிற் கண்டநற் கற்பினையும்- வான்
மாரியைப் போல்கொடை வீரமென் றப்புறக்
..காட்சியு மிங்குநான் கூறுவனே!

பண்டைய காலத்துக் காதலெல் லாம்பழம்
...பாடலிற் கண்டு மனங்களித்தோம்
வண்டலை யுந்நறுஞ் சோலை யிலேயவர்
...கண்டு களித்தின்ப மெய்திவந்தார்
ஒண்டொடி யாளுட லொண்மை யினால்மனம்
...ஒன்றிய காதலால் நாயகனின்
தண்ட லருமஞ்சுந் தான்கொண்ட வீரமும்
...மண்டி யிட்டாங்கு வீழ்ந்ததுவே!

கொல்லுங் கொடுங்கணை கைகளி லேந்திய
...வீரக் கரந்தையர் போலவளும்
வெல்லு முறுதியில் வல்லமை கொண்டேகும்
...வெட்சி மறவரைப் போலவனும்
சொல்லுஞ் செயலின்றி பார்வையிற் போரிட்டே
...யன்பெனு மாநிரைக் கொண்டனரே
அல்லும் பகலிவ ரன்பிற் றிளைத்தது
...காதற் களவெனு மோர்ப்பெயரே!

உள்ளங் கலந்தபின் னூருங் கலந்ததை
...யம்ப லலரென்று வைத்தனரே- அது
கள்ளங் கடத்திநற் கற்பினிற் சேர்ந்திட
...வுந்தும் வகையென நாமறிந்தோம்
தெள்ளு தமிழ்கண்ட உள்ளத் துணர்வினை
...கண்டு மகிழ்ந்திடு மெங்குலத்தீர்- இன்று
எள்ளற் கிடந்தரும் வேடிக் கைகட்பல
...வந்து கலந்தன யிவ்வகத்தே!

மண்ணிற் சிறந்தநம் மானுட வர்க்கண்ட
...எண்ணச் சிறப்புக ளேராளம்- அதில்
கண்ணிற் சிறந்தனக் கல்வி கலையென
...சொல்லி வளர்த்தது பேறாகும்
மண்ணை யளந்துயர் விண்ணை யளந்திடும்
...வன்மை யறிந்தனர் நம்மவரே- சிறு
எண்ணை யளந்ததை யேட்டினில் வைத்துநற்
...பண்டம் பகிர்ந்தனர் நம்மவரே!

கூரிய வாட்பட்டு கூறான பிண்டங்கட்
...கொட்டிக் கலந்தன போர்க்களமும்- ஓர்
தேரது காற்பட்டு கூழாகி சேறாகிச்
...செம்புல மாகவே தோன்றியதே- அத்
தேரதை கோலின்றி யாடிடும் முல்லைக்கு
...யீந்தவ னீகையை யென்னவென்பேன்- இப்
பாரினிற் பாரிக்கு யீடாக வள்ளன்மை
...கொண்டிடு வார்வேறு யாருமுண்டோ?!

நெஞ்சி லுரத்துடன் நேர்மை திறத்துடன்
...வஞ்சனை களின்றி போர்புரிந்தார்- பகை
அஞ்சி பணிந்திட தஞ்ச மளித்தவர்
...நெஞ்சு நெகிழ்ந்திட வாழ்ந்திருந்தார்- இன்று
நஞ்சு கலந்ததோர் நெஞ்ச முடையவர்
...விஞ்சிடு வாரிந்த நாட்டினிலே- வெண்
பஞ்சினைப் பற்றிய தீயது முற்றுமுன்
...மெய்யுணர் வாலதைக் காத்திடுவோம்!

வாழிய வாழிய செந்தமிழ் வாழிய
...வாழிய வாழிய பல்லாண்டே- நீர்
ஆழியி லெஞ்சிய மண்ணகம் போற்றிட
...வாழிய வாழிய பல்லாண்டே- தீது
சூழினும் ஞாலத்திற் சீர்பெற்று நற்றமிழ்
...வாழிய வாழிய பல்லாண்டே- நான்
ஏழிசை யாலுனைப் பாடிடு வேன்நீயும்
வாழிய வாழிய பல்லாண்டே!

எழுதியவர் : பாரதிப் பித்தன் (6-Jul-14, 10:03 am)
சேர்த்தது : பாஸ்கர்
பார்வை : 100

மேலே