உன்னோடுதான் வாழ்ந்திருப்பேன்

வாசம் வீசும் மல்லிபோல
உன்னோட மனசிருந்தும்
வாடிவிட்ட உடலாலே
வலுவிழந்து நிற்கையிலே

வாசலுக்கு வந்துவிட்ட
காலனுக்கும் கருணை இல்ல
காலமெல்லாம் தொழுதிருந்தும்
கடவுளுக்கும் ஈரமில்ல

உயிருக்கு போராடி
உதிர்கின்ற மலர்போல
விழிமூடும் வேளையிலும்
என்(னை)ன நினைத்தாளோ?

தான்பெற்ற மகளை
தனக்கருகில் வரச்சொல்லி
அப்பாவை பார்த்துக்கோவென
கண்கலங்கி சொன்ன வார்த்தை
துணையாய் வாழ்ந்திருக்கும்

எம்மனசில் நீயொருத்தி
எப்போதும் நிறைஞ்சிருப்பே
இன்னுமொரு பிறப்பெடுத்தால்
உன்னோடுதான் வாழ்ந்திருப்பேன்.

எழுதியவர் : கோ.கணபதி (16-Jul-14, 12:26 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 86

மேலே