ஒரு மழை இரு துளி

வெப்பத்தை கக்கி கொண்டிருந்த சென்னை
வெட்கம் பரவ மேகத்தோடு மோகம் பூண்ட
மாலைப் பொழுது

கரு மேகம் சூழ
வெண்மை சற்று மென்மை பெற்று இருள
வாழ்வே இருள் பூண்ட
வறுமைக்கு வாக்கப்பட்ட சமுதாயம்
இரவை எதாவது சமுதாய கூடத்தில்
கழிக்கலாமா? அல்லது அருகிலிருக்கும்
அரை அடுக்குமாடி கட்டிட
பணியாளர்களோடு கழிக்கலாமா?
என எண்ணும் பொழுது

வெண்ணிற ஆடையில் வந்த ஐடி பதுமையின்
ஆடையில் அடை மழை பொழிய அவள்
அங்கங்களின் அறிமுகத்திற்காக ஆவலோடு
ஆடவர்கள் காத்திருக்கும் பொழுது

பகல் காட்சி முடிந்து
பால்கனியில் இருந்து வந்த-ஜோடி
பருந்துகள் பேருந்தில் பயணிக்க

பெண் பருந்து அலைபேசியில்
அப்பாவோடு பேசுவதாய் சொல்லிவிட்டு
அந்தப்புறமாய் திரும்பி அடுத்த நாள்
அந்தப்புர நாயகனிடம் ஆசை வார்த்தைகளை
அள்ளி தெளித்துக் கொண்டிருந்தது
அந்தப்புற(ர) நாயகனோ பருந்தின்
பின்னிருக்கையில் இருக்க...

ஆண் பருந்தோ காற்றாடும்
பேருத்தில் அருகிலிருந்து
அன்னப்பறவையோடு
அங்க உரசலில் ஈடுபட
ஆத்திரத்தில் இரும்புக்கம்பியை
இருக பிடிக்க, பருந்து அன்னத்தின் விரல்களில்
இதழ் பதிக்க முற்பட - பொறுமையின்
அளவிழந்த அன்னப்பறவையோ
இடி விழுந்தாற்போல் அறை ஒன்றை
பருந்திற்குக் கொடுத்த பொழுது

மெய்யாலுமே இடி இடித்து
அடுக்குமாடி கட்டிடம் ஒன்று
ஆட்டம் கண்டு
அப்பளமாய் நொறுங்கியது...

வறுமை சமுதாயம்
இரவை கழிக்க எண்ணி
அடுக்குமாடி கட்டிடம்
சரிந்து கிடப்பதை கண்டு
கடவுளுக்கு கண்ணீர்
கடிதம் வரைய

ஐடி பதுமை அதிர்ச்சியிலிருந்து
மீண்டு தன் அங்க அறிமுகத்திற்கு
காத்திருந்த கயவர்களை
காலால் உதைத்து களத்தில் இறங்க
சொல்லி கொண்டே மீட்க விரைந்தாள்
இடிபாடுகளின் இடையில் இருப்போரை

பின்னிருந்த அந்தப்புர நாயகனை கண்டு
அடுக்குமாடி கட்டிடத்தை காட்டிலும்
அதிகம் ஆட்டம் கண்ட பெண் பருந்து
அமைதியாய் அகண்டது

ஆண் பருந்தை, அறைந்த அன்னப்பறவை
"அடுத்த முறை உன்ன பாத்தேன்..அவ்ளோ தான்"
என எச்சரித்துவிட்டு அவசர உதவி எண்ணை
அலைபேசியில் அழைத்துக் கொண்டே
அடங்கிய அடுக்குமாடியை நோக்கி வீரைந்தாள்

ஐடி பதுமையும், அன்னப்பறவையும்
புகை மண்டலத்தில்
இரு துளியாய் மறைந்தனர்

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (24-Jul-14, 6:56 pm)
பார்வை : 384

மேலே