வாராய் புத்தாண்டே

வானச் சுடரினை மோனத் தவமென
...நாளும் வலம்வருதே.-புவி
...நாளும் வலம்வருதே!- அந்த
ஞானப் பொருளினைப் போற்றும் அறிவினைத்
...தாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

தாழும் நிலையிலுந் தாழாத் தகையினைத்
...தாராய்ப் புத்தாண்டே-இந்த
...தரணியிற் பல்லாண்டே- என்னைச்
சூழுங் கவலைகள் யாவும் பொடிபட
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

எங்குஞ் செழுமையிற் பொங்கும் வளமைகள்
...தாராய்ப் புத்தாண்டே- இந்தத்
...தரணியிற் பல்லாண்டே- வந்து
தங்கும் பொருளொடு மங்காப் புகழ்தர
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

கல்லைக் கனியென சொல்லக் கனிந்திடும்
...வல்லமையைத் தாராய்- நல்
...வாக்கினையுந் தாராய்- இனிய
வெல்லச் சுவையினை சொல்லிற் கலந்திட
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

கள்ள மிலாதொரு பிள்ளை சிரிப்பினிற்
...கவலை மறந்திடவே- புது
...கவிதை பிறந்திடவே- அவர்
உள்ளம் நிறைகளி கொள்ளும் வகைதனில்
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

மண்ணிற் பெரும்புகழ் கொண்டு விளங்கிடும்
...மாதவ மாதர்தமை- நல்
...மாண்புறச் செய்திடவே- இணை
எண்ணஞ் சிறந்தவர்க் கண்ணொளி பெற்றிட
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

வாள்விழி மங்கையர்த் தோள்வலி பொய்யெனும்
...வீணரை மாய்த்திடவே- தழல்
...வீரத்திற் காய்த்திடவே- யிரு
தாளிடை யிட்டவர்த் தலையை நசுக்கிட
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

ஊனக் கருவெனும் ஈனப் புலையரை
...கொன்று புதைத்திடவே- புவி
...நன்று சமைத்திடவே- எரி
வேனற் கதிரென ஊன மழித்திட
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

ஞாலஞ் சிறந்திட நாங்கள் முயன்றொரு
...சூளுரை செய்திடவே- நற்
...சுடரினை ஏற்றிடவே- இக்
காலஞ் சிறப்பென காதி லுரைத்திட
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

எழுதியவர் : பாரதிப்பித்தன் (1-Aug-14, 11:29 am)
சேர்த்தது : பாஸ்கர்
பார்வை : 1126

மேலே