ஓ பட்டாம்பூச்சிகளே - கவிஞர் சி அருள்மதி

ஓ பட்டாம்பூச்சிகளே !

உயிர் வண்ணப் பட்டங்களை
என் வீட்டுத் தோட்டத்தில்
பறக்கவிட்டது யார் ?

கம்பளிப் பூச்சியாய்
முசுக்கொட்டை இலைகளை
நீ தின்ற போது
முகம் சுளித்தவன் நான் !

என் நட்பைப் பெறவா
உள்ளுறை வாசம் இருந்து
வரம் பெற்றாய் வண்ணத்துப்பூச்சியாய் !

உன்னைப் பிடிக்க பலமுறை முயன்று
தோற்றுப் போனேன்
தோல்வியிலும் மகிழ்ந்து போனேன்.
சேற்றில் விழுந்தும்
சிராய்ந்து கொண்டும்
பள்ளி விட்டதும்
பட்டாம்பூச்சி வேட்டைதான்!

ஒரு நாள் மூன்று மணி நேரம்
விடாமல் பெய்த மழையால்
மூலையில் கிடந்தாய்.

மூன்று நாள் குழந்தையை
முழுவதும் தூக்க முடியாமல்
உன்னைத் தூக்கினேன்.

உன் வண்ணச் சிறகுகளின் சாயத்தை
நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தது.

உனை நுகர்ந்தேன்
என் வீட்டு மல்லிகைப் பூவின்
தேனைத் திருடியவன் நீ தான் !

ஓரிரு நிமிடங்கள் என் மூச்சுக் காற்றின்
வெப்பத்தில் உன் இறக்கைகள்
உலர்ந்து உயிர் பெற்றன.
"நன்றிச்சாயம்" பூசிச்சென்றாய்.

என் கையில் சற்று முன்
துடித்த 'உயிர் வானவில்'
சிந்திய வர்ணங்களை
அரிதாரமாய் கன்னத்தில் பூசிக்கொண்டு
இருகை விரித்தேன்
நானும் ஒரு பட்டாம்பூச்சியாய் !

பட்டாம்பூச்சியாய் -
என் குழந்தைப் பருவம்
கண்ணீரில் நனைந்து
என் வண்ணக்கனவுகள் அழிந்து கொண்டிருந்தன. !
வெள்ளை மனதில்
வெறுமைகள் நிரம்பிக் கொண்டிருந்தன.!!

என் வீட்டுக் கொடியில் உலர்கிறது
'சாயம்போன வானவில்' –
என் அம்மாவின் வெள்ளைப் புடவை !
அன்புத்தேன் குடிக்க அரை நிமிடமாவது
அவளின் புடவையில் அமர்ந்து விட்டுச் செல்லுங்கள்
அப்படியாவது அவளின் வெள்ளைச் சேலை
வண்ணச் சோலையாகட்டும் !

விதவை மனதில் வண்ணப் பூச்சுகள்
அனைத்தும் உள்வாங்கி
எதுவும் பிரதிபலிக்காத
வெள்ளை நிறமாய் அவள் !

எதையும் உள்வாங்க மறுக்கும்
கறுப்பு நிறமாய் நான் !

ஓ பட்டாம்பூச்சிகளே !
என் முசுக்கொட்டைத் தோட்டத்தில் - உங்களது
ஹோலிப் பண்டிகையை நிறுத்துங்கள் !

ஆண்டுகள் பறந்தன !

என் வண்ணமில்லா வாழ்க்கையில
உங்கள் இறக்கைத் தூரிகையால்
மகிழ்ச்சிச்சித்திரம் வரைந்து கொண்டிருந்தீர்கள் !

வளர்சிதை மாற்றத்தால்
என்னுள்ளும் நிறப்பிரிகை !

என் இதயக் குக்கூனில் வளர்ந்த காதல் புழு
இறக்கை வரித்தது ஒரு மாலைப்பொழுதில் !
அவள் இருக்குமிடம்
'வலசை'போனது என் மனது !

காதல் இரகசியம் செப்ப
புற ஊதா குறியீட்டில்
வரைந்து கொண்ட வண்ண மொழியா
உன் இறக்கைகள் ?!

கால்கள் ஆடிய
வண்ணக் கதகளிக்கு
மயங்கித் தேன் தந்தனவா மலர்கள் !

மகரந்தச் சேர்க்கையால்
மலட்டு மலர்களுக்கு
மருத்துவச்சியாகும் தாய்ப்பூச்சிகளே !
என்னவளின் மனச்சேர்க்கைககும் உதவுங்கள் !

கதிரவனின் கழுத்தைத் தழுவும் வண்ண மாலைகளே !
தேனில் குழைத்த மகரந்தமா
என்னவளின் இதழ்சுவை ?!
கண்டுவந்து சொல்லுங்கள்.

மெல்லினம் கொன்று
அவள் இடையினம் அலங்கரிக்க
வல்லினப் பட்டு வழங்கும் வண்ணத் தலைமுறைகாள் !

அவள் மருதாணி பூசவில்லை என்றா
முசுக்கொட்டைச் சாறால்
ரங்கோலி வரையப் போகிறாய் !

பட்டாடை அவள் உடுத்த
படபடக்கும் என் இதயம்
அழகால் அல்ல!
என் இணைபிரியா நண்பர்களின்
இறந்த கூடுகளை இணைத்து நெய்த
'மரணப்பட்டறைக் கழிவாய்'
நீங்கள் பரிசளித்த
'உயிர் கோடித்துணி'
எங்கள் மணமேடையில் -
அமங்கலமாய் உணர்கிறேன் நான் !

முதலிரவில் –
என் ‘பட்டாம்பூச்சி உணர்வுகளை’
பகிர்ந்து கொண்டேன் அவளிடம்.

மறுநாள் காலை -
சூரியனை வரவேற்கும் புள்ளிவைத்த கோலங்கள்
பறக்கும் விண்மீன்கள்
உயிர் வண்ணக் கண்காட்சி -
வாசலில் பட்டாம்பூச்சிக்கோலம் போட்டிருந்தாள்.
பருத்திப் புடவையில் பளபளத்தாள்.

நான் சிரித்தேன்.
‘காந்தியின் கதர் எனக்கு பிடிக்குமென்றாள்.’
பட்டாம்பூச்சிக்கும் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த
காந்திஜீக்கு நன்றி சொன்னேன்!

பருவ காலங்கள் பறந்தன ....
என் வீட்டுத் தோட்டத்தில்
‘முசுக்கொட்டை மலர்களாய்’
நூற்றுக்கணக்கில் பட்டாம்பூச்சிகள்!

அவை உடைத்தெறிந்த கூடுகளைப் பொறுக்கிக்கொண்டு
கூடாரம் அமைத்து ‘அன்புத்தவம்’ புரிந்தோம்.
வரமாய் ஒரு பெண் குழந்தை !

எங்கள் வண்ணக் கனவுகள் சிறகு பெற்றன.
மகிழ்ச்சி வானில் பறந்தோம்!
சேற்றில் உறிஞ்சும் சேர்மங்கள்
உன் சேய்களுக்கு சத்துணவா ?!
என் மகளும் சேற்றில் விளையாடட்டும் !

பட்டாம்பூச்சி வேட்டைக்கு துணைக்கழைத்தாள் மகள்.
உன்னைத் தொடமுயன்று
முட்டி மோதி
விரட்டி விழுந்து
தோற்றுப்போய் உட்காரும் என் கால்கள் !

புத்த விகாரமாய் என் தோட்டம்!
ஞானக்கதிராய் சூரியன்!
மௌன இருப்பில் இலகுவாய் உணர்கிறேன்
போதிமரத்தின் குளுமையை - என் கையில் வந்தமர்ந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சி !

எழுதியவர் : கவிஞர் சி. அருள்மதி (5-Aug-14, 1:22 pm)
பார்வை : 259

மேலே