என்னுயிர் நீதானே பாகம் 2

""என்னுயிர் நீதானே.."
( பாகம் இரண்டு)

தோழியுடன் வெளியே வந்த மதுமிதாவை எல்லோரும் பச்சாதாபத்துடன் பார்த்தனர். சுமங்கலியாய், திருமணப்பெண் கோலத்தில் வெளியே வந்தவளைப் பார்த்த மதுமிதாவின் அம்மா வாய்விட்டு கதறினார். "இந்தக் கோலத்தில் உன்னைப் பார்க்கவா நான் உயிரோடு இருக்கின்றேன் இன்னும்" என்று அவர் கதறியது வந்திருப்போர் அனைவரின் விழிகளையும் கலங்கிட வைத்தது...

மதுமிதா மௌனமாக புரோகிதர் அருகில் வந்து நின்றாள். " வாம்மா, ஒன்றும் கவலைப் படாதே.. நம் கையில் எதுவும் இல்லை. எல்லாம் அவன் செயலம்மா." இறைவனின் மேல் சர்வசாதரணமாக பழியைப் போட்டு விட்டு மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க ஆரம்பித்தார்.. "பெரியம்மா, பாட்டிமா, வாங்க வாங்க, ஆகவேண்டிய காரியங்களை சட்டுபுட்டுனு துவங்குங்க,," உத்தரவு பலமாக இருந்தது.

வெளியே வந்த மதுமிதாவை சில வயது முதிர்ந்த உறவுப் பெண்கள் நாற்காலியில் அமரச் செய்தனர். ஒரு தாம்பாளமும், ஒரு கிண்ணத்தில் பாலுடன் அவள் முன் வைத்தனர். சட்டென்று எழுந்தாள் மதுமிதா. அருகில் இருந்த தோழியின் கரம் பற்றி, " மீரா, அவர்கள் இப்போது என்னச் செய்யப் போகிறார்கள், கேட்டுச் சொல்" என்றாள்.

அவள் சொன்னது மற்றவர்கள் காதுகளிலும் விழுந்திருக்கும். ஆனால் யாருமே பதில் சொல்லாமல் ஒருவரையொருவர் பார்த்தனர். மீண்டும் இம்முறை சிறிது உரக்கவே கேட்டாள் மதுமிதா. புரோகிதர் தான் முன்வந்து, " இல்லம்மா.. இது கண்டிப்பாக செய்யக்கூடிய சடங்கு... உன் தலையிலிருந்து பூவையும், இரு கரங்களிலிருந்து வளையல்களை கழற்றி தாம்பாளத்தில் வைத்திடு, அப்படியே பிறகு ..ம்ம்ம். பிறகு உன் மாங்கல்யத்தை கழற்றி அந்தப் பால் கிண்ணத்தில் போட்டுவிடு.. நீயாக கூட செய்ய வேண்டாம்... இந்த பாட்டிமா அனைத்தையும் செய்து விடுவாங்க " புரோகிதர் நீளமாய் விளக்கம் கொடுத்தார்

மதுமிதா மெல்ல அனைவரையும் ஒரு முறை பார்த்தாள். ஏதோ விபரீதத்தை எதிர்பார்த்து மீரா சட்டென்று மதுமிதா அருகில் வந்து அவள் தோளை அணைத்தபடி நின்றாள். " சரி, நீங்கள் சொன்ன மாதிரி வளையல்களையும், பூவையும் கழற்றி விடுகிறேன். ஏனெனில் அவை வெறும் அலங்கார பொருட்கள் தானே. ஆனால் மாங்கல்யத்தை ஏன் கழற்றணும்? அம்மி மிதித்து, அருந்ததிப் பார்த்து, அக்கினியை வலம் வந்து, பெற்றோர், உற்றார், உறவினர் என ஆயிரம் பேர் அட்சதை தூவ, என் கணவர் என் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை ஏன் கழற்றணும்?" மதுமிதா நிதானமாக ஆணித்தரமாக கேட்டாள். கூடியிருந்தவர்கள் ஸ்தம்பித்து போயினர் என்று சொல்லலாம். சில நொடிகள் ஒரே நிசப்தமாய் இருந்தது.

சில வினாடிகள் தான் கரைந்திருக்கும். " இது என்னமா கூத்தா இருக்கு. கட்டியவன் போய் சேர்ந்திட்டா தாலியைக் கழற்ற வேண்டியது தானே சம்பிரதாயம். என்னம்மா ... லெட்சுமியம்மா . உம்மகளுக்கு இதையெல்லாம் சொல்லி வளர்க்கலையா?" பக்கத்து வீட்டு பாட்டி அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

மதுமிதாவின் தாய் பரிதாபமாய் மகளைப் பார்த்தாள். பார்வையில் தொனித்தது தர்மசங்கடமான வினா. மௌனமாக தாயைப் பார்த்து விழிகளாலேயே சமாதானப் படுத்திவிட்டு புரோகிதர் பக்கம் திரும்பினாள் மதுமிதா. " கட்டியவர் உருவமாய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உயிராய் என்னோடு தான் இருக்கின்றார். அவர் அணிவித்த இந்த மாங்கல்யம் என் உயிர் போகும் வரை என் கழுத்தை விட்டு இறக்கிட நான் சம்மதிக்க மாட்டேன். சொல்லப்போனால் என் கணவரின் விருப்பமும் இதுதான். பலமுறை இது பற்றி விவாதித்துள்ளோம். அதனால் நான் கழற்றப் போவதில்லை." முத்தாய்ப்பாக மதுமிதா சொல்லி முடிப்பதற்குள், அவள் மாமியாரின் அத்தை உரக்கமாய் நிந்திக்க ஆரம்பித்தாள். "உன் துக்கிரித்தனத்தால் தான், திருமணமான இரண்டு மாதத்திற்குள், கட்டியவனையே சுடுகாட்டுக்கு அனுப்பிட்ட, இப்போ தாலி அறுக்காமல் இருக்கிறவங்களையும் குழிக்கு அனுப்பிட முடிவு செய்திட்டியா ...?" அத்தையின் வார்த்தைகள் அமிலமாய் காதில் விழுகையில், பூமி அப்படியே இரண்டாகப் பிளந்து தம்மை விழுங்கிட்டால் என்ன என்று தோன்றியது மதுமிதாவுக்கு.

தலையைப் பிடித்தபடி அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள். பலமிழந்து போயின கால்கள் இரண்டும். மேற்கொண்டு என்ன பேசுவதென்று புரியாமல் மழுங்க மழுங்க விழிக்க, "போதும் நிறுத்துங்க.. இதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசவேண்டாம்" என்று அதட்டியபடி வந்தார் சரவணனின் தாய். மறுமகளின் அருகில் வந்தவர், "இவள் சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது? சரவணனின் அப்பா இறந்த பின் தாலியை கழற்றாதீங்க என்று எவ்வளவோ கெஞ்சினான் சரவணன். நான் அந்தக் கால மனுஷியானதாலும், என் உறவினரின் குத்தல் பேச்சுக்கு ஆளாகக் கூடாது என்பதாலும், அவர்கள் சொன்னபடி அப்படியே செய்தேன். அந்த நிலைமை என் மறுமகளுக்கு வரவேண்டாம். சரவணனின் விருப்பப்படி அவள் வாழட்டும்." நீளமாக பேசி முடித்த மதுமிதாவின் மாமியார், அவள் பக்கம் திரும்பி, "இனி நீ என் மறுமகள் இல்லை, மகள்.. உள்ளே போமா, மீரா அவளை உள்ளே அழைத்துச் செல்" என்று மீராவைப் பணித்தாள்.

மதுமிதாவின் வாழ்க்கையின் முடிவு நாளை தெரியும்....

தொடரும் பாகம் 3ல்.


பெ.மகேஸ்வரி.

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (6-Aug-14, 8:08 am)
பார்வை : 456

மேலே