என் மகனாய் நீ - பொள்ளாச்சி அபி-அமரர் சுசீலா மணி நினைவுப் போட்டிக் கவிதை

"உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடைவண்டி நீ..
கரிசன களிம்புக்காரன் நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்..,"

விளையாட்டாய் செய்த தவறுகள்
வினையாக மாறுவதைத் தடுத்தவன் நீ
நல்வினைகளை விளையாட்டாய்
செய்யப் பழக்கியவனும் நீ..!

ஏட்டுக் கல்வியின் அடிமைத்தனத்தை
வீட்டுக்குள் கொண்டுவர மறுத்தவன் நீ
யதார்த்த உலகைப் படிக்கச் சொல்லி
வெளியே அனுப்பியவனும் நீ..

தொழிலாய் செய்யும் எதுவென்றாலும்
தோழர்களோடு இணையச் சொன்னவன் நீ
வேறுபாடுகளின் சங்கமத்திலிருந்து
வெளியேறச் சொன்னவனும் நீ..

பருவவயதில் காதல் வருவதை
கேலி செய்யாதவன் நீ
மதத்தைக் கடந்து கைப்பிடித்தவளை
மருமகளாய் வரவேற்றவனும் நீ..

பெண்மை வாழ்ந்தால் மண்மேல்
உண்மை சமூகம் வாழுமென்றவனும் நீ
உற்பத்திக் கருவியாய்,உரிமைப் பொருளாய்
கற்பித்த சிந்தனையில் சிக்கவிடாதவன் நீ

வாழ்வென்பது வருடத்தின் கணக்கல்ல
வாழ்ந்ததின் அடையாளமென்றவன் நீ
உன்போல் வாழ பக்குவம் வேண்டி
ஏங்கிட வைத்த நீ..,
என் மகனாய்ப் பிறக்க வருவாயோ..?
கற்றதை சோதிக்க வாய்ப்பு தருவாயோ..?
----------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (10-Aug-14, 10:47 pm)
பார்வை : 156

மேலே