நாகரீகம் அணிந்த அநாகரீகம்

ஜாதி மகுடம் அணிந்த
சமுதாய வெகுமானங்கள் கொண்டு
தலை நிமிர்ந்து திரியும்
அந்தஸ்து நாகம்
இல்லாதவள் முந்தானையில்
தன் மாணிக்கம் கக்கிவிட்டு
அந்தரங்கமாய்
சமத்துவ இரைதேடி உண்ணும்

வீட்டுக் கழிவு எடுக்கவரும்
சுத்திகரிப்பாளனுக்கு
தேங்காய்ச் சிரட்டையில்
தண்ணீரை வாசலுக்கு
வெளியே நீட்டும் ஆச்சாரம்
ஊர்மாறிப்போய்
பொதுக் குளத்தில் நீராடுதலாய்
மதுக்குளத்தில் நீராடுகையில்
எவனெவனோ குடித்த
எச்சில் பாத்திரத்தில்
மிச்சமின்றி சமத்துவம் உறிஞ்சும்.

நேர்த்திக்காய் முடிவளர்த்து
கடவுளின் பாதத்தில்
காணிக்கைச் செலுத்த
காலெடுத்து நடக்கும் காலம்
எதிரே நாவிதன் வந்தால்
சகுனம் சரியில்லை என்றே
திரும்பிப் போகும்.

கடவுளுக்காய்
கல்லறைத் தோட்ட மலர்களை
கருவறைக்குள் அனுமதிக்கும்
சில்லரை ஞாயங்களில்
மனிதர்களை தள்ளிவைக்கும்
முரண்பாட்டுக் காயங்கள்
ஆற்றுவதற்கு மருந்தில்லா
மனம் சுமந்து திரிகிறோம்
நாமும் நாகரீகம் அணிந்த
அநாகரீகமாய்!

மெய்யன நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Aug-14, 2:18 am)
பார்வை : 184

மேலே