காதல் சொல்லும் அக்கவிதை - இராஜ்குமார்
பிம்பம் ஒன்றை
பிடித்து பிரித்து
இமையை கொஞ்சம்
திறந்து பார்த்தால் - உன்
தேகம் ஒன்றே தெரியுதடி ..!!
சன்னல் கம்பிகளின்
கரம் பிடித்து
கைகுலுக்கி கொண்டே
தென்றலை அழைத்து - உன்
குரலை கொடுத்தால்
தேனை போல வருடுதடி ..!!
காலணி கிடக்கும்
தரையை துடைத்து
வண்ணம் பூசி
பூச்செடிகள் நட்டே
பூக்கள் வளர்த்தால்
இதழ்கள் கூட மின்னுதடி ..!!
வட்டமான மொட்டுகளின்
வயது கேட்டு
வம்புகள் செய்தே - உன்
நினைவை ரசித்தால்
இளமை ஏனோ ஏங்குதடி ..!!
விரல்களின் வரிகளில்
நகம் போல்
நயமாய் வளரும் - என்
காதலை - நீ
ஒட்ட நறுக்கி விட்டாலும்
வெட்ட வெட்ட
வளருமடி இக்காதல் ..!!
கையில் கொடுத்த கவிகளை
கிழித்து கிழித்து
வெட்ட வெளியில் வீசியது
உனது வெறுப்பா ? வெட்கமா ?
என்னன்பே கவிதைகளை - இனி
தெருக்களில் தேட வேண்டாம்
உன் வீட்டின் விளக்கருகே
விரித்து வைக்கிறேன்
விருப்பான தருணத்தில்
வசதியாக வாசித்துப் பார் ..!!
நான் இல்லையெனினும் - என்
காதல் சொல்லும் அக்கவிதை ..!!
பெண்ணே
நீ நிம்மதியாய் நிற்கும்
கோவில் கோபுர
கலசம் ஒன்றின்
காது பிடித்து
காதல் சொல்கிறேன் ..!!
கேட்கிறதா ..!!
- இராஜ்குமார்