ஞாலம் போற்றியக் கவிஞர்களே மீண்டும் வருக

வீரமறவர்களே
வீரத்தை வளர்க்க - ரத்த எழுத்துக்களை
விதைத்த கவிஞர்களே
மீண்டும் பிறந்து வாருங்கள்.
சுதந்திர வேட்கையில்
சுருண்டே வாழ்ந்த
சுயநலம் இல்லாத - உணர்வில்
பொதுநலம் கொண்டிட்ட புரவலர்களே
மீண்டும் பிறந்து வாருங்கள்.
எதுவெல்லாம் வேண்டாமென
எழுத்துக்கள் மூலம் - புரட்சிகளை
விதைத்த புனிதவான்களே
மீண்டும் பிறந்து வாருங்கள்.
இருட்டில் கிடந்த
இந்தியாவை வெளிச்சத்தில்
கொண்டுவந்த - கோலேச்சாத
குடிமகன்களே - மீண்டும் பிறந்து வாருங்கள்.
மூவர்ணக் கொடிக்காக
மூன்றுவேளை சோறுக் கூட
உண்ணாமல் எழுதித் தள்ளிய
உத்தமர்களே மீண்டும் பிறந்து வாருங்கள்.
உணர்வின் வெளிப்பாடுகளை
உறங்காமல், மதி மயங்காமல்
உத்தமக் காந்தியின் சத்தியப் பிரமாணத்தை
உலகறிய உணர்த்திய எழுச்சிமிகு
பாரதப் புதல்வர்களே - மீண்டும் பிறந்து வாருங்கள்.
சாதிமதம் பாராமல் சகோதரத்துவம்
சிதையாமல் சாதித்த சரித்திரத்தின்
சத்தியப் புதல்வர்களே - மீண்டும் பிறந்து வாருங்கள்.
வெள்ளையனின் அடிமை ஆதிக்கம்
வேரறுத்து வெற்றிவாகை சூட
வைத்திட்ட - எழுதுகோல்
வாளெடுத்த வேந்தர்களே - மீண்டும் பிறந்து வாருங்கள்.
மீண்டும் பிறந்து வந்தால் - எதை
மீட்க எழுதுவீர்கள். - கலப்பட அரசியல்வாதிகள்
மீண்டு எழுந்து வாழ்வதை - கண்டித்து
மீண்டும் ஒரு சுதந்திரத்தை வாங்கித்தர இயலுமா?
மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்தாலும் - அது
எந்த சாதிக்குக் கிடைக்கச் செய்வீர்கள்? - ஆம்
சாதிப் பூசலில் சுதந்திரம் கிழிந்துக் கொண்டிருக்கிறது.
ஞாலம் போற்றியக் கவிஞர்களே மீண்டும் வாருங்கள்.
ஞாலத்தின் அவலத்தைக் காண வாருங்கள்.
சரித்திரத்தில் சாதித்துவிட்ட - உங்கள் சிலைகளுக்கு
சல்லடையாய் சாதிக்கொரு மாலை இட்டு
சண்டையிட்டுக் கொண்டே சுதந்திரத்தை சுவாசிக்கின்றோம்.
பொது மக்களை எல்லாம் சாதிக்கொருக் கட்சியில்
இணையச் சொல்லி விஷவாயு வார்த்தைகளால்
கலவரத்தில் ஈடுபட வைத்து செத்து மடிகின்றோம்.
பொதுநலம் எல்லாம் - இங்கே இல்லை.
சுயநலம் எல்லாம் வீழ்ந்ததில்லை
வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை அணிந்து
கொள்ளைக் கூட்டங்களாய்
குவிந்துக் கிடக்கிறார்கள். - இவர்களை எல்லாம்
விரட்டி அடிக்க - இன்னொரு புரட்சி செய்ய
மீண்டும் பிறந்து வாருங்கள்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (17-Aug-14, 7:29 pm)
பார்வை : 104

மேலே