கடைசி சொந்தக்காரன்
அப்பா செத்தபோ...
தாய்மாமன்,அத்தை
சித்தப்பன்,பங்காளி
சேந்தேதான் வந்தாங்க!
ஒருத்தன் விழுந்தான்
என் மார்மேல
ஒருத்தி அழுதா
என் தோளபுடிச்சி
இன்னும் ரெண்டு
கதறிச்சி
கட்டிப்புடிச்சி.
இருந்தப்ப வரல
எவனுமே பாக்க.
இறந்த அன்னிக்கி...
பாக்காத பாசத்த
காட்டிச்சிங்க அத்தினியும்.
"கவல படாத கன்னு...
கொடுத்துவச்சது
அவ்ளோதான்"
"நாங்கள்லாம் இருக்கோம்!
நாளுகிழமை வருவோம்"
"இருக்கறவங்கள பாரு..
அவுரு இங்கதான் இருப்பாரு!"
ஆறுதலா வார்த்தைகள்...
ஆயிரமா சொன்னாங்க...
ஒதடுகளே பேசியது
மனசைத்தான் ஆத்தல.
வந்தவன்தான் அழுதான்,
எனக்கோ... வரல.!
வெளியபோய் அண்ணாந்து
வானத்தையே பாத்தேன்!
'ஏன்பா என்ன விட்டுப்போன?'
கேள்விதான் வந்திச்சு..
உள்ளவந்து ஒண்டியா
உக்காந்தும் பாத்தேன்.
'எப்படிப்பா நான் இருப்பேன்?'
கேள்வியே வந்தது.
செத்தால் வர்ற கேள்விகள்
பதில் இல்லா கேள்விகள்,!!
கேள்விமேல கேள்விகேட்டு
கேள்வியாகிப் போனேன்.!
யாரோ வந்து அழுத்த
அனிச்சையாய் எழுந்தேன்!
நெருங்கிவந்து நின்னான்
நெருக்கமான சிநேகிதன்.!!
ஆறுதலா வார்த்தைகள்
ஒன்னுகூட சொல்லல...
ஒருகைய இறுக்கமா
புடிச்சிகிட்டே இருந்தான்..
மறுகைய இழுத்து
ரூபாகட்ட திணிச்சான்...
"போதுமா?....
எதுன்னாலும்
என்ன கேளு!"
மட்டும்தான் சொன்னான்.!
அழுகை வெடிச்சு
அப்படியே விழுந்தேன்.
" மச்சான் நைனா
போயிட்டார்றா"

