அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

இறுதி வார்த்தைகள் என்னுடையவை ஆகலாம்
இறுமாப்புடன் நானதைச் சொல்ல முயலலாம்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் மாறலாம்
சீழ்க்கை ஒலியெழுப்பிச் சிங்க நடை போடலாம்.!

காலத்தின் தார்ச் சாலையில் நான் துவக்கலாம்
காலடித் தடம் அழுத்திப் பதித்து நடக்கலாம்
சாலச் சிறந்த படைப்புக்கள் அளிக்கலாம்
கோலம் போட்டெனை உலகு வரவேற்கலாம்
இறுதி வார்த்தைகள் என்னுடையவை ஆகலாம்!!

விரியும் இரவுகளில் நினைவுகளைப் பிரிக்கலாம்
சரிவுகள் கடந்ததை எண்ணிச் சிரிக்கலாம்
பரிந்துரை இன்றியே பரிசோதனை வெல்லலாம்
வரிந்துக் கட்டிக் கடமையைச் செய்யலாம்
இறுமாப்புடன் நானதைச் சொல்ல முயலலாம்!!!

விருப்பம் அறிந்தவள் விடையினை அளிக்கலாம்
நெருப்பெனத் தகிக்குமென் தேகம் குளிரலாம்
நெருக்கம் நிறைந்தவள் நாணத்தில் வளையலாம்
துருப்புச் சீட்டதில் நான் தோற்றுப் போகலாம்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் மாறலாம்!!!!

வாழ்ந்த மலைகளின் பள்ளங்கள் நோக்கலாம்
தாழ்ந்த இறந்த காலங்கள் மடியலாம்
ஆழ்ந்த மனதின் இருளினைப் போக்கலாம்
சூழ்ந்திடும் சோகத்தை சொடக்கிட்டு முறிக்கலாம்
சீழ்க்கை ஒலியெழுப்பிச் சிங்க நடை போடலாம்.!!!!!

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (19-Aug-14, 2:37 pm)
பார்வை : 169

மேலே