அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

மனம் மணத்திற்கு பிறகு
மாறிவிட்டதாய் ஒரு மாயை
மனையாள் மௌன மொழி கண்டு
துணையாள் தோகை சுருங்கக்கண்டு....
காதலிக்கும் காலங்களில்
கால் கடுக்க நடந்திருக்கிறேன்
நானூறு வேலையிருந்தும்
நயமாய் நொடியொதுக்கி நடுநிசியிலும்...
உடல்கள் தூரத்திலிருந்தும்
உள்ளங்களை நெருக்கி
உல்லாச உலா போயிருக்கிறேன்
உதய மலரவளோடு....
உலகத்தில் அவளை விட
உயர்ந்தது
ஒன்றுமில்லையென
சிகரத்தில்
வைத்திருந்திருக்கிறேன்....
மணமான பின்
அவள் மனமாறவில்லை
மனம் மாறிவிட்டது எனக்கு
சிகரத்தை விட்டு
சிறிது சிறிதாய்
சீதையவளை
இறக்கியிருக்கிறேன்
தினமறியமாலே அவள்
மனம் புரியாமலே .....
தின்பண்டங்களும்
தினமொரு புது உடையும்
மல்லிகைப்பூவும்
மயங்க வைக்கும்
மாது மனம்
கிறங்க வைக்குமென
போட்ட கணக்கு
போனது தவறாய் எனக்கு
ஒளி வீசிய விளக்கு
திரியைத் தானே
ஒளித்துக் கொண்டு
இருள் கோலம்
காட்டும் வரை.....
உணர்ந்த போது
உடம்பு கூசியது
என் வாழ்வை
எழில் வாழ்வாக்கியவள்
வர்ணமிழந்த ஓவியமாய்
காரணமாய் நான்.....
அலுவலகத்திலும்
அந்நியர்களிடமும்
இணையத்திலும்
இழந்த நேரத்தின்
விளைவு
சுரண்டியிருக்கிறது
என்னவளின்
வசந்த வண்ணங்களை......
வசதிகள் எத்தனை
வந்தாலும்
வாழ்க்கையை ஆக்காது
வனப்பு
இள்ளால்
இருண்டால்
பூக்காது மண
வனப் பூ...
உணர்ந்த நொடி
ஒதுக்கிவிட்டேன் நொடிகளை...
சுருங்கிய இதழ் விரிகிறது
சுருண்ட பூ மலர்கிறது
இழந்த வர்ணம் சேர்கிறது
இனிய ஓவியம் மீண்டும் உருவாகிறது.....
அழகான வாழ்க்கை
ஆனந்தமாய்
தினம்தோறும் இனி
தேன் மன்றமாய்.......