நிச்சயதார்த்தம்
உறவினர்கள் புடைசூழ, நண்பர்களின் படைசூழ,
பெண்பார்க்கும் படலத்தில் முன்னிலையில் நான்;
எதிரேபெண் வீட்டாரும், ஊராரும் சுற்றாரும்,
தாம்பூலத் தட்டோடு அமர்ந்திருந்தோர் தான்;
தேவதையின் வருகைக்காய் எல்லாரும் காத்திருந்தோம்;
எந்தநொடி வருவாளென வாசலையே பார்த்திருந்தோம்;
தேநீரைத் தட்டொன்றில் ஏந்திவந்த தாரகையை,
கண்டதுமே தொலைத்தேனே இணைபிரியா என்மனதை;
குனிந்ததலை நிமிரவில்லை, பார்வைமட்டும் சுழன்றது;
பட்டுவேட்டி சட்டைகண்டு எந்தன்மீது நின்றது;
நானும்நோக்கி விட்டதனால், நாணம்தாங்க மாட்டாமல்,
ஏனொயெனை தவிர்த்துவிட்டாள், தேநீரை நீட்டாமல்;
"மாப்பிளைக்கு கொடம்மா"என அவள்தந்தை ஆணையிட,
வெட்கத்திலே அவள்கன்னம் குங்குமமாய் சிவந்துவிட,
வேறெங்கோ பார்த்தவாறு, தட்டைமட்டும் நீட்டினாள்;
நளினமென்றால் என்னவென்று அன்றெனக்கு காட்டினாள்;
குவளையொன்றை எடுக்கும்சாக்கில் கரத்தைநான் தீண்டிவிட,
புன்னகைக்க தாளாமல் உள்ளேயவள் ஓடிவிட,
பார்த்துவிட்ட எல்லாரும் 'கொல்'லென்றே சிரித்தனர்;
"கல்யாணம் முடியட்டும்..." என்றுஎள்ளி நகைத்தனர்;
ஓடியவள் என்னானாள் என்றுவாசல் நான்நோக்க,
உள்ளிருந்து விழியொன்று மறைந்துநின்று எனைப்பார்க்க,
மோதிக்கொண்ட பார்வைகளால், நிலைகுலைந்தோம் இருவருமே;
எங்களுக்கு நினைவில்லை, எமைத்தவிர ஒருவருமே;
மணத்தேதி குறித்தபடி நிறைந்தது அவ்விழா;
ஓரக்கண்ணை சிமிட்டியது, வெட்கப்பட்ட வெண்ணிலா..!
- JeanyMoni!!!