எழுத்து தளம் ஒரு வசியதளம் 0o0 எழுத்து தளத்திற்கு இக்கவிதை சமர்ப்பணம்
![](https://eluthu.com/images/loading.gif)
எழுத்து தளமொரு ஆலமரம் - அதன்
நிழலமர் பறவையும் பலவாயிரம்
கவி மலர் கதை மலர் தோட்டங்கள்
வாசம் நுகர்ந்திட வாசகர் கூட்டங்கள்!!
கவிகள் தமிழில் கட்டிய தேன் கூடு
உலகோரே வந்துண்டு தமிழ் பசியாறு
இது போல் கூடுண்டோ நீ கூறு
"எழுத்து" உண்ணத் திகட்டா தேனாறு!!
கேள்விகள் தொடுத்திட பதிலுண்டு
அறிவினை வளர்த்திட அறிஞருண்டு
கவிதை எழுதிட கற்று தருவோருண்டு
விகடம் பேசி சிரித்திட வைப்போருமுண்டு!!!
தந்திரமென்ன செய்ததுவோ - "எழுத்தில்"
விழுபவர் எழுதலும் சுலபமில்லை - நான்
என்றோ விழுந்தேன் இன்னும் மீளவில்லை
விடுபடும் எண்ணமும் ஏனோ வரவில்லை!!!
எழுத்துக் குடும்பமென் மறு வீடு
என் வாழ்வின் பகுதி இனி இதனோடு
இரண்டாண்டு கால வாழ்க்கையிலே
எண்ணற்ற உறவுகள் சேர்க்கையிலே!!
உறவென்றாகும் உடன் பிறப்பில்லை
சண்டையிட்டாலும் பங்காளியில்லை- எழுத்து
கட்டிப்போடும் ஆயினும்மந் திரமில்லை
போதை தருமாயினும் மதுவுமில்லை!!!
வாரதிருப்பின் வினவும் பிள்ளையுண்டு
வரவினில் குதறிடும் எதிரியுண்டு
நட்பும் பகையாய் மாறுவதுண்டு - இங்கு
பகையும் நட்பாய் மலர்வதுண்டு!!!
"அம்மா" என்றொரு மகளின்/மகனின் குரல்
"அக்கா" என்றொரு தம்பி குரல்
"தங்கை" என்றொரு அண்ணன் குரல்
"தோழி" என்றொரு நட்பின் குரல்!!!
ஒலியில்லா அழைப்பினில் மனம் துள்ளும்
கவலையும் சுவடின்றியே ஒளியும்
அன்பின் மழையில் நனைந்திடலாம்
முகமறியா பாசத்தில் உறைந்திடலாம்!!
எழுத்தின் உறவே யாவரும் கேள்
உண்மை அன்பே என்றும் கொள்
உறவினில் பிணக்குகள் வரும் போகும்
உடனே மறந்திடல் என்றும் நலமாகும்!!!
படைப்புகள் காத்திடும் பெட்டகத்தில்
தமிழை படைப்பீர் அமிழ்தாய் பலவிதத்தில்
நாட்டின் கேட்டினை இடித்துச் சொல்வீர்
நன்மைகள் நடக்க பா வடித்தே செல்வீர்!!!
தமிழினை தரணியில் வளர்த்திடவே
தமிழரைஒன்றிணைத்திட்ட பாலமிது
இலவச இடமிங்கு நமக்கெல்லாம் - ஈந்த
தமிழ் நேசர் ராஜேஷ் குமார் வாழியவே!!!
தளமிதன் வளர்ச்சி வான் தொடுமே - நாளை
வரலாறும் எழுத்தின் பெருமை பேசிடுமே
எழுத்துக் குழுமம் வாழிய... வாழியவே...!!!
எழுத்து உறவுகள் வாழிய... வாழியவே..!!!.
=====================================================================================================================================
இது என்னுடைய 200வது படைப்பு என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு ஆனந்தமே. இப்படைப்பினை எழுத்து தளத்திற்கு சமர்ப்பணம் செய்கிறேன். பின்னோக்கி சென்று நோக்கினால் நானா இவ்வளவையும் எழுதினேன் என்கிற மலைப்பு. எழுத இங்கே தாராளமாக எல்லோருக்கும் இடமளித்திருக்கும் திரு ராஜேஷ் குமார் அவர்களுக்கும், எழுத்து குழுமத்தினருக்கும் இத்தளத்தைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்று நினைத்த சமயங்களில் எல்லாம் என்னை எழுத உற்சாகப் படுத்தியும் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டியும் எனக்கு ஊக்கமளித்த திரு அகன் அய்யா அவர்களுக்கும் திரு கே.எஸ். கலை அவர்களுக்கும் முதற்கண் என் நன்றிகளையும் என் படைப்புகளுக்கு கருத்துக்களும் மதிப்பெண்களும் அளித்து இத்தனை நாட்கள் என்னை உற்சாகப் படுத்திய / உற்சாகப்படுதிக்கொண்டிருக்கும் அத்தனை எழுத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். . உங்களின் அன்பான வாழ்த்துக்கள் எனக்கு என்றென்றுமாய்....மேலும் கிடைக்கும் என்கிற எதிர் பார்ப்பினில்.....
அன்புடன்,
சொ. சாந்தி
=====================================================================================================================================