கூட்டல் கழித்தல் பெருக்கல்

கூட்டல் பெருக்கல் வகுத்தல் கழித்தல்
இவைக் கணக்கு மட்டுமல்ல;
நல்லனக் கூட்டி, பகுத்தறிவு பெருக்கி
நல்வாழ்க்கை வகுக்க தீயனக் கழித்தலடா.

தாயின் அன்பில் கருணைக் கூட்டி
தந்தையின் நிழலில் அறிவைப் பெருக்கி
குருவின் பாதையில் ஒழுக்கம் வகுத்து
தெய்வத்தருளால் பேராசைக் கழித்திடடா.

காந்திய வழியில் சத்தியம் கூட்டி
பாரதியின் பெண்ணிய உணர்வு பெருக்கி
வீர பாண்டியனின் வீரம் வகுத்து
பெரியார்போல் மூடநம்பிக்கை கழித்திடடா.

விவேகானந்தரின் விவேகம் கூட்டி
காமராஜரின் தீர்க்க தரிசனம் பெருக்கி
கற்றதினாலான பயனை வகுத்து
பொருளாதார வேற்றுமைக் கழித்திடடா.

வாழ்வது ஒருமுறை தான்
நீ வாழ்ந்திடு பிறர்க்கெனத் தான்
மனிதநேயம் கூட்டி ஒற்றுமைப் பெருக்கி
சாதிபேதங்கள் கழித்து நன்னிலம் வகுத்திடடா.

எழுதியவர் : அபர்ணாசெங்கு (27-Aug-14, 12:13 pm)
பார்வை : 117

மேலே